இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வலுவாக மீண்டு வந்தாலும், மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர் அதாவது சுமார் மூன்றில் ஒரு பங்கினர் வறுமை மட்டத்திலும் அல்லது மீண்டும் வறுமையில் விழும் அபாயத்தில் உள்ளனர் என்று இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் டேவிட் சிஸ்லன் (David Sislen) தெரிவித்துள்ளார்.
உலக வங்கியால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் SRI LANKA DEVELOPMENT UPDATE அறிக்கையை வெளியிட்டு டேவிட் சிஸ்லன் இந்தக் கருத்தை குறிப்பிட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க மீட்சியை அடைந்துள்ளதாகவும், முன்னர் கணிக்கப்பட்ட 4.4 சதவீத பொருளாதார வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடும்போது 5 சதவீத வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்வதன் மூலம் வளர்ச்சி எதிர்பார்ப்பை விட அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சிக்கு தொழில்துறை மற்றும் சேவைகளில், குறிப்பாக கட்டுமானம் மற்றும் சுற்றுலா தொடர்பான சேவைகளின் வலுவான செயல்திறன் காரணமாகியுள்ளதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.