Wednesday, January 15, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்!

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்!

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்,ரோஹிங்கிய அகதிகளை மியன்மாருக்கு திருப்பி அனுப்பாதீர்கள்

புதிய ஆண்டில் ஆரம்பமாகியிருக்கும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ரவூப் ஹக்கீம் முக்கிய சில விடயங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தார்.

இந் நாட்டில் சட்டமும்,ஒழுங்கும் நிலைநாட்டப்படுவதனூடாக சரியான வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவதோடு,அதற்குச் சாதகமான சூழ்நிலையையும் உருவாகும் என்ற கருத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.

நமது நாட்டில் இந்த சட்டமும்,ஒழுங்கு
ம் பாதுகாக்கப்படுகின்றதா என்று நாங்கள் சிந்திக்கவேண்டும் எனக் கூறிய ரவூப் ஹக்கீம் ,பத்திரிகை செய்தியையும் சுட்டிக்காட்டினார். அதாவது, “சட்டமா அதிபர் திணைக்கள அலுவலர்களை ஜனாதிபதி
நீதியமைச்சரோடு சந்தித்த ஒரு செய்தியைக் காணக் கிடைத்தது. அவர்களது சந்திப்பில் இந்த வழக்குகள் தாமதித்தல் உள்ளிட்ட பல விடயங்களை கலந்துரையாடியிருப்பதாக தெரியவருகின்றது” என்றார்.

ஜனாதிபதி , ஊழல் ஒழிப்பு தினத்தில் ஆற்றிய உரை பற்றி நாங்கள் கவனம் செலுத்துவதென்றால் சட்டமா அதிபர் திணைக்களத்திற்குள்ள பல சவால்களை முன்வைத்தார், அதன் பலனாகத்தான் இந்த கலந்துரையாடல் நடந்திருக்கலாம் என்ற எண்ணம் இருப்பதாக ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

மேலும் , சட்டமா அதிபர் திணைக்கள அலுவலர்கள் ஒரு விடயத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கின்றது. அதாவது பொலிஸ் திணைக்களத்தில் பல குறைகள் இருப்பதாக தெரியவந்திருக்கின்றது. அவர்கள் சரியாக கோப்புக்களை அனுப்புவதில்லை என்றும், விசாரணைகள் சரியாக முடிக்கப்படாமல் கோப்புக்கள் அனுப்பப்படுவதாக கூறப்பட்டிருக்கின்றது. இவ்வாறு பத்திரிகை செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

சட்டமா அதிபர் திணைக்கள உத்தியோகத்தர்கள் அறிக்கை ஒன்றையும் வழங்கவிருப்பதோடு, தற்போதைய வழக்குகள் பற்றிய விபரத்தையும் வழங்கவிருக்கிறார்கள்.

இன்று ஜனவரி 8 ஆம் திகதி, இதே போன்றதொரு தினத்தில் 2009 ஆம் ஆண்டில் எமது நாட்டில் இருந்த ஒரு ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நினைவு படுத்திய ரவூப் ஹக்கீம், தானும்,ரவி கருணாநாயக்கவும் கனத்தை மயானத்திற்குச் சென்று அன்னாரை நினைவு கூர்ந்ததை குறிப்பிட்டு, குறித்த படுகொலை இன்னும் ஒரு இரகசிய கொலையாக இருப்பதையும் சுட்டிக்காட்டினார். லசந்த விக்கிரமதுங்க “மிக்” விமான கொடுக்கல்,வாங்கல் பற்றிய தகவல்களை, சர்ச்சைக்குரிய விடயங்களை பத்திரிகைகளில் எழுதி வந்தார். பல சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் வெளியிட்டிருந்தார். அது பற்றி ஒரு வழக்கும் இருக்கின்றது. அவருக்கு எதிராகவும் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அவரது வழக்கு தொடர்பான சாட்சியங்களை விசாரித்தால் அவரது படுகொலை தொடர்பான விபரங்களை கண்டறியக்கூடியதாகவிருக்கும்,அந்த குற்றவாளிகள் யார் என்பதையும் நாங்கள் கண்டுபிடிக்க முடியும்.

நான்கு ஜனாதிபதிகள் வந்து சென்றுவிட்டார்கள் ஆனால் இந்த வழக்கில் நடவடிக்கைகள் இன்றும் தொடர்ந்துவருவதை சுட்டிக்காட்டினார்.

இது பற்றி சட்டமா அதிபர் திணைக்களம் மௌனம் சாதிப்பதாகவும்,பொலிஸ் திணைக்களம் என்ன கூறுகிறது என்று பார்த்தால் அதுவும் மௌனமாக இருப்பதாக தெரிவித்தார்.

இவ்விடயங்களில் கடந்த காலங்களில் நேர்மையாக செயற்பட்ட அதிகாரிகள் தொடர்பாக சுட்டிக்காட்டிய ரவூப் ஹக்கீம், குறித்த விடயங்கள் தொடர்பான எல்லா விடயங்களும் அறிந்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்களிடமுள்ள தகவல்களை உள்ளடக்கி இறுதியாக ஒரு முடிவுக்கு வருவது இந்த அரசாங்கத்தின் பிரதான கடமையாகவுள்ளது என்பதை பல விடயங்களை முன்வைத்து உரையாற்றினார்.

அதுமாத்திரமில்லை கீத் நோயர், உபாலி தென்னகோன் போன்றவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் அதில் கீத் நோயர்க்கு நடந்த கொடுமைகள் தொடர்பாகவும் ரவூப் ஹக்கீம் நினைவு படுத்தியதோடு,உண்மை வெளிக்கொணரப்படவேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினார். மேலும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு பற்றி இந்த அரசாங்கம் கவனத்தில் வெள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அதேநேரம், ஒடுக்கு முறையை இந்த அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் என்பதை பத்திரிகை செய்தியொன்றை மேற்கோள் காட்டி உரையாற்றினார். அதில் சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சி திட்டம் தொடர்பான கலந்துரையாடல் பேராதனை பல்கலைக்கழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது தொடர்பாகவும்,பல்கலைக்கழகங்களில் இப்படியான ஒரு விடயம் இடம்பெறுமாக இருந்தால் அது மிக பாரதூரமானது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

பல்கலைக்கழகத்தின் கல்விசார் சுதந்திரம் ஒரு நாட்டின் முக்கிய விடயமாகும் என்பதையும் தெளிவுபடுத்தினார். சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சி திட்டம் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கான பொதுமக்களுக்கான உரிமையை தெளிவுபடுத்தியதோடு, இந்த அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தில் கட்டளைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை ஏற்றுக்கொண்டுள்ளதையும் தெளிவாக எடுத்துரைத்தார்.

மியன்மாரில் இருந்து இலங்கை வந்துள்ள ரோஹிங்கிய அகதிகள் தொடர்பாகவும் சபைக்கு தனது நிலைப்பாட்டை தெரிவித்ததோடு, இவ் விடயத்தில் அரசாங்கம் நடந்துகொள்ளும் விதத்தையும் கண்டித்தார்.

மனித உரிமை ஆணைக்குழு எங்கும் சென்று தங்களுக்கு தேவையான விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரம் இருந்தும், அவர்களை ரோஹிங்கிய அகதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள விமானப்படைத் தளத்திற்கு சென்று சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ரோஹிங்கிய சிறுபான்மையினர்கள் இலங்கைக்குள் வந்திருப்பது இது முதற்தடவை அல்ல கடந்த காலங்களிலும் வருகை தந்ததை நினைவுபடுத்திய ரவூப் ஹக்கீம், ரோஹிங்கிய அகதிகள் பங்களாதேஷ், மலேசியா, சவூதி அரேபியா போன்ற நாடுகளில் இடம்பெயர்ந்து வாழ்வதை குறிப்பிட்டார்.

இலங்கை அமைச்சர் ஒருவர் ரோஹிங்கிய அகதிகளை மனித கடத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் எனக் கூறிய கருத்தை விமர்சித்த ரவூப் ஹக்கீம், “மனித கடத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என்று நீங்கள் இவ்வாறு கூற என்ன துணிவு உங்களுக்குள்ளது” என வினா எழுப்பி, 1980 களில் வன்முறைகள் நடைபெற்றபோது இத்தாலி,லெபனான்,பிரான்ஸ்,ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளுக்கு மக்கள் விடுதலை முன்னணி(JVP) அங்கத்தவர்கள் சென்றார்கள் என்பதை எடுத்துக்காட்டி இன்றைய அரசாங்கத்திற்கு ரோஹிங்கிய மக்களின் நெருக்கடியான நிலையை உணர்த்தினார்.

ரோஹிங்கிய அகதிகள் தொடர்பாக மியன்மார் அதிகாரிகளோடு அரசாங்கம் பேசுவதை கண்டித்து ,அந்த மக்களுக்கு நடக்கும் கொடுமைகளை எடுத்துச் சொல்லி, ரோஹிங்கிய அகதிகள் விடயத்தில் அதிகாரிகள் சொல்வதை கேட்டு இங்கு வந்து கூறுவதற்கு அமைச்சர்கள் நியமிக்கவில்லை. கிளிப்பிள்ளை போல் பேசவேண்டாம் எனவும் கண்டித்தார்,மேலும், விடயங்களை ஆராய்ந்து பார்த்து தீர்மானங்களை எடுங்கள் என வலியுறுத்தினார். மேலும் ரோஹிங்ய அகதிகளை திரும்பவும் மியன்மாருக்கு அனுப்புவதற்கு அரசாங்கம் எடுக்கும் முடிவானது சர்வதேச ரீதியாக நாட்டிற்கு இருக்கும் நற்பெயரை கெடுத்துக்கொள்ளும் செயல் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சமவாயங்களை ரோஹிங்கிய அகதிகள் விடயத்தில் பின்பற்றுமாறும் வலியுறுத்தினார்.

மேலும், மனித கடத்தல்காரர்கள் என அவர்களை கூறுவதை தவிர்க்குமாறும், திரும்பவும் அவர்களை மியன்மாருக்கு அனுப்பும் எண்ணத்தை இந்த அரசாங்கம் கைவிட்டு அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதோடு,பாதுகாப்பான வேறு நாடுகளுக்கு அனுப்புவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக ரோஹிங்கிய அகதிகள் விடயத்தில் தனது அக்கறையையும்,கரிசனையையும் தனது உரையினூடாக ரவூப் ஹக்கீம் தெட்டத்தெளிவாக வெளிப்படுத்தியதை காணமுடிந்தது.

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (பீ.ஏ) -ஓட்டமாவடி.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular