இலஞ்சம் – ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் 2025 ஆம் ஆண்டின் அதிர்ச்சியூட்டும் கைதுகள்
2025 ஆம் ஆண்டு இலங்கையில் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்த நிலையில், நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 130 சுற்றிவளைப்புகள் பலரையும் சட்டத்தின் முன் நிறுத்தியது.
இந்தக் கைதுகளில் அதிகமானோர் இலங்கை பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள். மொத்தம் 30 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- 13 பொலிஸ் சார்ஜன்ட்கள்
- 9 பொலிஸ் கான்ஸ்டபிள்கள்
- 4 உப பொலிஸ் பரிசோதகர்கள்
- 2 தலைமை பொலிஸ் பரிசோதகர்கள்
இது சட்டத்தை காக்க வேண்டிய அமைப்புக்குள் ஊழல் எவ்வளவு ஆழமாகப் பரவியிருப்பதை வெளிப்படுத்துகிறது.
பொலிஸாரைத் தவிர, நீதி அமைச்சுடன் தொடர்புடைய 11 பேர், விவசாய சேவைகள் திணைக்களத்தின் 5 அதிகாரிகள், 3 கிராம உத்தியோகத்தர்கள், 3 பிரதேச சபை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றிவளைப்புகளைத் தவிர, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மூலம் 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் முன்னாள் அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், வைத்தியர்கள் மற்றும் பிரதேச சபைகளின் முன்னாள் தலைவர்கள் அடங்குவர்.
2025 ஆம் ஆண்டில் 153 பேருக்கு எதிராக 115 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 69 வழக்குகள் நிறைவு பெற்றுள்ளன. ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடுகள் எண்ணிக்கை 8,409. அவற்றில் 569 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அரசாங்க சேவையில் இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பது அனைவரின் பொறுப்பு என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
இந்த புள்ளிவிவரங்கள், ஊழல் எதிர்ப்பு போராட்டம் வெறும் சட்ட நடவடிக்கையாக மட்டுமல்லாமல், சமூகத்தின் ஒவ்வொரு குடிமகனும் பொறுப்புடன் ஈடுபட வேண்டிய தேசிய கடமையாகும் என்பதை நினைவூட்டுகின்றன.
2025 ஆம் ஆண்டு, இலங்கையின் ஊழல் எதிர்ப்பு வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக பதிவாகியுள்ளது.


