ஜூட் சமந்த
வலான ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எனத் தன்னை அடையாளப்படுத்தி, வர்த்தகர்களை அச்சுறுத்தி கப்பம் பெற்று வந்த 31 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை வலான ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது நடவடிக்கை கடந்த 25ஆம் திகதி மாலை கெலனிகம அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் வைத்து இந்த கைது மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர் அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் வாட்ஸ்அப் ஊடாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வர்த்தகர்களைத் தொடர்பு கொண்டுள்ளார். தான் வலான ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எனக் கூறி, அவர்களை அச்சுறுத்தி பணம் பறித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறிப்பாக அம்பலாங்கொடை, காந்தர, இரத்தினபுரி, ஹொரண, பாணந்துறை, மாரவில மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் உள்ள ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்களிடம் இவர் இவ்வாறு கப்பம் பெற்றுள்ளார்.
கைது செய்யப்பட்ட சமயத்தில் சந்தேக நபரிடமிருந்து 25 கிராம் 620 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இவர் ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல், திருட்டு, கொள்ளை மற்றும் கப்பம் கோருதல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒரு பழைய குற்றவாளி என்பதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வலான ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


