அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பரவி வரும் காட்டுத் தீக்கு இதுவரை 11 பேர் பலியான நிலையில் ஆயிரக்கணக்கான கட்டடங்களும் வீடுகளும் தீக்கிரையாகி சாம்பலாக மாறிவருகிறது.
நீரேற்று நிலையங்களிலிருந்து தண்ணீர் எடுத்து பீய்ச்சி அடிக்கப்பட்டு வந்த நிலையில், அதுவும் தண்ணீரின்றி வறண்டுபோயிருக்கிறது. விமானம் மூலமும் காட்டுத் தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.
ஏழை முதல் கோடீஸ்வரர்கள் என அனைவரிடமும் இருந்து அனைத்தையும் பறித்துச் சென்றிருக்கிறது காட்டுத் தீ. வீடு என்றோ, பள்ளி என்றோ, வங்கி என்றோ பார்க்கவில்லை. அதற்கு அனைவரும் அனைத்தும் சமம் என்பது போல சாம்பலாக்கிச் சென்றிருக்கிறது.
காட்டுத் தீக்கு காரணம்?
தெற்கு கலிஃபோர்னியாவில் ஆண்டுதோறும் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு இருக்கும். இதனால் காடுகளிலும் மரங்கள் செழித்து இருக்கும், காற்றிலும் தேவையான ஈரப்பதம் இருப்பதால் காட்டுத் தீ பரவுவதற்கான அபாயம் குறைவாக இரக்கும்.
ஆனால், இந்த ஆண்டு குறைந்த மழைப்பொழிவும், பலமான காற்றும், காடுகளில் காய்ந்த மரங்களும், காட்டுத் தீ வேகமாகப் பரவக் காரணிகளாக அமைந்துவிட்டாகக் கூறப்படுகிறது.
தெற்கு கலிஃபோர்னியாவில் பற்றிய தீ மேலும் பரவக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஏற்கனவே லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் 35 ஆயிரம் ஏக்கர் நிலத்தை காவு வாங்கிக்கொண்டு, மேலும் தனது ஜூவாலையால் காட்டுப் பகுதிகளையும் குடியிருப்புகளையும் சம்பலாக்கும் வேலையை தீவிரமாக செய்து வருகிறது.