உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ள போதிலும், உள்நாட்டு பொருளாதாரத்தைக் கருத்திற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நேற்று (10) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 37.76% அதிகரித்துள்ள போதிலும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலை உயர்வு பாரிய அளவில் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
- ஆட்டோ டீசல்: 99.99%
- சூப்பர் டீசல்: 99.6%
- 92 ரக பெட்ரோல்: 75%
- 95 ரக பெட்ரோல்: 79%
எரிபொருள் விலையை உயர்த்தாவிடில், தனியார் நிறுவனங்கள் எரிபொருள் இறக்குமதியைக் குறைக்கும் அல்லது நிறுத்தும் அபாயம் காணப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார். அவ்வாறு நிகழுமாயின் நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“எங்களிடம் கையிருப்பில் இருந்த எரிபொருள் மற்றும் நாம் கட்டளையிட்ட (Order) தொகுதிகள் கிடைத்து வருகின்றன. கப்பல்களில் இருந்து எரிபொருள் இறக்கப்படும் தினத்திற்கு முன்னைய 2-3 நாட்களில் நிலவும் சராசரி விலையிலேயே இறக்குமதி விலை தீர்மானிக்கப்படுகிறது.”
கடந்த சில நாட்களில் இலங்கையில் எரிபொருள் நுகர்வு வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்களுடன் அமைச்சர் விளக்கினார்.
- சாதாரண தினசரி டீசல் நுகர்வு: 4,000 மெட்ரிக் தொன்
- மார்ச் 01 முதல் 09 வரை டீசல் நுகர்வு: 59,200 மெட்ரிக் தொன்
- மார்ச் 01 முதல் 09 வரை பெட்ரோல் நுகர்வு: 47,500 மெட்ரிக் தொன்
இதன்படி, கடந்த சில நாட்களில் மட்டும் மேலதிகமாக சுமார் 23,000 மெட்ரிக் தொன் டீசலும், 13,000 மெட்ரிக் தொன் பெட்ரோலும் நுகரப்பட்டுள்ளது. இந்த அதிகப்படியான நுகர்வினால் கையிருப்பில் இருந்த எரிபொருள் தீர்ந்துபோனதாகவும், புதிய கையிருப்புகளை தற்போதைய அதிக விலைக்கு இறக்குமதி செய்ய வேண்டியேற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
உண்மையில் அதிகரிக்கப்பட வேண்டிய விலை இதைவிட அதிகமாக இருந்த போதிலும், மக்களின் பொருளாதாரச் சுமையை கருத்திற்கொண்டு அந்த அதிகரிப்பு முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை.
இந்த விலை அதிகரிப்பின் ஊடாக மக்கள் தமது எரிபொருள் நுகர்வை ஓரளவுக்கு மட்டுப்படுத்திக்கொள்வார்கள் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.


