புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம் மற்றும் மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான அல்ஹாஜ் காதர் மஸ்தான் ஆகியோரின் பாரிய முயற்சியினால் புத்தளம் தொடக்கம் மரிச்சிக்கட்டி (கலாஓயா பாலம்) வரையான பஸ் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
முதல் கட்டமாக புத்தளம் தொடக்கம் மரிச்சிக்கட்டி வரையான பஸ் சேவைக்கு இலங்கை போக்குவரத்து சபையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம் அவர்களின் இணைப்புச் செயலாளர் தெரிவித்தார்.
இதேவேளை மரிச்சிக் கட்டி (கலாஓயா பாலம்) தொடக்கம் மன்னார் வரையான பஸ் சேவை விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதுடன் மன்னார் முதல் மடிச்சிக்கட்டி வரைக்குமான பஸ் சேவைக்கு போக்குவரத்து சபையின் அனுமதி மிக விரைவில் கிடைக்கப்பெற்று பஸ் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம் நம்பிக்கை தெரிவித்தார்.
பல வருடங்களுக்கு முன்னர் மூடப்பட்ட குறித்த போக்குவரத்து வீதியானது, மீண்டும் திறக்கப்படுவதை அடுத்து மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவதுடன், இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
பாரிய முயசியின் பின்னணியில் மீண்டும் குறித்த வீதி திறக்கப்படுவதினால் பல மணி நேர விரயம் இல்லாமல் போவதுடன், குறுகிய நேரத்தில் பயணங்களை மேற்கொள்ள முடியும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதி திறக்கப்படுவதன் மூலம் புத்தளத்தில் சுற்றுலா துறையினை மேம்படுத்தி அதிக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வரவலைப்பதன் மூலம் புத்தளத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம் அவர்களின் இணைப்புச் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.