ஐநா மனித உரிமைகள் பேரவை தேவையற்ற அரங்கு. அதைத் தாண்டி செயல்படுபவர்களுடன் இணைந்து செயல்பட தயார் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தமிழ் மக்களுக்கான சர்வதேச நீதியை கிடப்பில் வைத்திருக்கும் ஐநா மனித உரிமைகள் பேரவை தேவையற்ற அரங்கு என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கட்சி அரசியலுக்கு அப்பால் அதனை தாண்டி செயற்படுபவர்களுடன் தாம் ஒன்றிணைந்து செயல்பட தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
யாழ் தந்தை செல்வா கலையரங்கில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்; ஐநா மனித உரிமைகள் பேரவைக்குள் தமிழ் மக்களுடைய பொறுப்புக் கூறல் விவகாரம் பேசப்பட்டு சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக கிடப்பில் கிடக்கின்றது.
ஐநா மனித உரிமைகள் பேரவை, தமிழ் மக்களின் பொறுப்பு கூறல் விவகாரம் மேற்கு மற்றும் இந்திய வல்லரசுகளின் ஒரு கருவியாக மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் பொறுப்புக் கூறல் என்ற விவகாரம் 2012 ஆம் ஆண்டு அப்போதைய மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்தபோது அவரது ஆட்சி அகற்றப்படும் போது பார்ப்போம் என்றார்கள்.
2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்ற போது இது நல்ல ஒரு ஆட்சி இதில் பல விடயங்களை சாதிக்கலாம் எனக்கூறி இரண்டு வருடங்களுக்கு இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசத்தை பெற்றுக் கொடுத்தார்கள்.
இவ்வாறான விடையங்களை நாங்கள் அம்பலப்படுத்துவதால் எம்மை ஒரு தரப்பு குறை கூறுகிறது அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
2009 மே மாதம் 17ஆம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா இறுதி யுத்த நிலமை தொடர்பில் மூன்று தூதரகங்களுக்கு தெரியப்படுத்துமாறு கூறியதற்கு இணங்க இந்தியா அமெரிக்கா மற்றும் பிரித்தானிய தூதரகங்களுக்கு நான்தான் தகவல்களை தெரிவித்தேன்.
அதனை நீங்கள் அறிய வேண்டுமானால் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தகவல் பரிமாற்றத்தை கசிய விட்ட விக்லீஸ் தகவல்கள் அதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கையில் இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு ,போர் குற்றம் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்துக்கு ஊடாக நீதி பெறப்பட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பு.
அதனை விடுத்து ஐநா மனித உரிமைகள் பேரவைக்குள் தொடர்ந்தும் தமிழ் மக்களுடைய பொறுப்பு கூறல் விவகாரத்தை தக்க வைப்பதற்கு சில தரப்புக்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
சர்வதேச அரசியலை கற்ற ஒரு மாணவன் என்ற வகையில் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன், ஐநா மனித உரிமைகள் பேரவை என்பது தமிழ் மக்களுடைய பொறுப்புக் கூறல் விவகாரத்தை மலினப்படுத்தும் தேவையற்ற அரங்கு.
தமிழ் மக்களுடைய பொறுப்பு கூறல் விவகாரத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கு எங்களால் ஆன முயற்சியை மேற்கொண்டு வரும் நிலையில் சில தரப்புக்கள் அதனை கொச்சைப்படுத்தும் வேலை திட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.
ஆகவே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாக தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு கட்சி அரசியலை தாண்டி பயணிக்க விரும்பபவர்களுடன் நாமும் இணைந்து செயல்பட தயார் என அவர் மேலும் தெரிவித்தார்.