யுத்தத்திற்கு பின்னரான பொறுப்பு கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான சர்வதேச பார்வை இலங்கை மீது காணப்பட வேண்டுமாக இருந்தால் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்படவேண்டும் என தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி சம்பியன் லீக் போட்டியில் கலந்து கொள்ளும் கிளிநொச்சி சுப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் சீருடை அறிமுக நிகழ்வு அணி உரிமையாளர் ந.குகதீஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளருமான எம்.ஏ .சுமந்திரன் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்;
நாளை மறு தினம் ஆறாம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பான அறுபத்து ஒன்று தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது.
சென்ற வருடம் இணை அனுசரனை நாடுகள் கொண்டு வரும்போது இலங்கை அரசாங்கம் அதனை எதிர்த்தது. வாக்கெடுப்பு நேரத்தில் வாக்கெடுப்பை கோரவில்லை அது வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது. இந்த முறையும் இந்த எதிர்பார்ப்பினை இணை அனுசரனை நாடுகள் கொண்டுள்ளன.
இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்ட சில திருத்தங்களை கூட மேற்கொண்டுள்ளனர். சில வார்த்தை பிரயோகங்களினால் சில நாடுகள் எதிர்த்தால் அது நிறைவேற்றாமல் போனால் அது பாதகமாக அமையும். இந்த தீர்மானத்தால் என்ன பிரயோசனம் என்று பலர் எதிர்த்துள்ளனர்.
குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படாமல் போனால் யுத்தத்திற்கு பின்னரான வடக்கு கிழக்கின் பொறுப்பு கூறல் நல்லிணக்கம் தொடர்பான பார்வை இல்லாது போகும். குறிப்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளரின் பார்வை தொடர்ந்து காணப்படும். தொடர்ச்சியாக குறித்த தீர்மானத்தை கொண்டுவரும் நாடுகளுக்கு நன்றி கூறுகின்றோம்.
உள்ளடக்கத்தில் சில எதிரான கருத்துக்கள் உள்ளன அதனை சுட்டிகாட்டியிருக்கின்றோம். இந்த முயற்சியை கொண்டுவரும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கின்றோம் என்றார்.