ஓட்டமாவடி, மஜ்மா நகர் மையவாடிக்கு காணி கொடுத்தவர்களுக்காக நாடாளுமன்றில் குரல் கொடுத்த ரவூப் ஹக்கீம்
எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA)- ஓட்டமாவடி.
பாராளுமன்றத்தில் கடந்த (27/02/2025) வாய்மூல கேள்விக்கான நேரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சரிடம் கொவிட் உடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட பிரதேசம், மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பில் பல கேள்விகளைக் தொடுத்தார்.
கொவிட் பெருந்தொற்றால் மரணித்த 3000 க்கு மேற்பட்டவர்களின் உடல்கள் இந்த ஓட்டமாவடி, மஜ்மா நகர் மையவாடியில் நல்லடக்கம் செய்ததாக குறிப்பிட்டார்.
அவருக்கு தெரியும் நான் அவ்வப்போது சுகாதார அமைச்சரிடம் இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கின்றேன், அறிவியல் சாராத முறையில் நிலக்கீழ் நீர் மிகவும் ஆழமாக இருக்கின்றதான பிரதேசங்களில் இந்த நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்கின்ற கருத்தின் காரணமாக இவ்வாறான அழுத்தங்களுக்கு பெருமளவிலான மக்கள் முகம் கொடுத்தார்கள்.
அவர்களுடைய உறவினர்கள், நண்பர்களுக்கும் இறுதி மரியாதை செலுத்துவதற்கு கூட வாய்ப்பு இல்லாமல் தூரப்பிரவேசங்களுக்கு கொண்டு சென்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
நான் கேட்பது இந்த மஜ்மா நகர் என்கின்ற பிரதேசம் ஓட்டமாவடி பிரதேச செயலக ஆளுகை பிரதேசத்திற்குள் வரும் மிகவும் கஷ்டமான, அதேபோல் ஏழ்மை நிலையில் இருக்கின்றதான சுமார் 300 குடும்பங்கள் வாழ்கின்ற பிரதேசம். அந்தப் பிரதேசத்தில் அவர்கள் பயிர்செய்கையில் ஈடுபட்டு வந்ததற்கான உரிமங்கள் உடைய காணிகளைக் கொண்டிருப்பவர்களுக்கு அநீதி ஏற்பட்டிருக்கின்றது.
இதை கையகப்படுத்திய காரணத்தினால் இதில் பத்து பேர் மேல் முறையீடு செய்திருக்கின்றார்கள் அல்லது விண்ணப்பித்திருக்கின்றார்கள் தங்களுக்கு மாற்றுக்காணிகள் வழங்கப்பட வேண்டும் என்று. ஆகவே, பிரதேச செயலக அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் இது கலந்துரையாடப்பட்டிருக்கின்றது.
தயவுசெய்து இது சம்பந்தமாக அவசரமாக நடவடிக்கை மேற்கொண்டு அரச காணிகள் அன்மித்த பிரதேசத்தில் இருக்குமாயின் அத்தகைய காணிகளைப் பெற்று இழந்த காணிகளுக்கு உண்மையில் உரிமைதாரர்கள் இருக்கின்றார்கள், அவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? என்றவாறு தனது வினாவை ரவூப் ஹக்கீம் தொடுத்தார்.
குறித்த வினாவுக்கு பதிலளித்த அமைச்சர், இது அரச காணியாகத்தான் இருந்தது, ஆனாலும் தனியார் துறையினர் மேட்டு நில பயிர்ச்செய்கைக்காக இதை ஈடுபடுத்தி இருக்கின்றார்கள். அந்த காணி தான் இப்பொழுது மயானமாக பயன்படுத்துவதற்காக கையகப்படுத்தப்பட்டு இருக்கின்றது.
கௌரவ உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கூறியது போல மாற்று காணிகளை வழங்குவதற்கு எவ்வித தடையும் இல்லை என்று குறிப்பிட விரும்புகின்றேன். என்று குறித்த அமைச்சர் பதிலளித்தார்.