தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.
வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.
நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.
முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.
எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.
பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.
தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.