கஞ்சா பயிர்ச்செய்கை சட்டரீதியாக்கப்படுவது, பாதுகாப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்லும் ஒரு திட்டமாகும் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
கஞ்சா பயிர்ச்செய்கைக்கு ஏழு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.
முதலீட்டுச் சபையின் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் ஒரு திட்டமாக கஞ்சா பயிர்ச்செய்கைக்கான அனுமதி 7 வெளிநாட்டு முதலீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த 12.08.2025 அன்று தெரிவித்தார்.
இதன் நோக்கம், பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் பயிர்ச்செய்கையின் அனைத்து பகுதிகளையும் ஏற்றுமதிக்கு மட்டுமே பயன்படுத்துவதும், நாட்டிற்கு பொருளாதார நன்மைகளைப் பெறுவதும் என்பதை அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
கடந்த காலங்களில், இந்த முடிவை இலங்கையில் செயற்படுத்த எத்தணித்திருந்தனர்.
எனினும், இலங்கை மருத்துவ சங்கம், இலங்கை மனநல மருத்துவர்கள் சங்கம், சமூக மருத்துவர்கள் சங்கம் மற்றும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் சமூகங்களின் செல்வாக்கு காரணமாக முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.
முந்தைய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட திட்டத்தை செயல்படுத்த தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது மிகவும் வருந்தத்தக்க விடயமாகவுள்ளது.
இந்த திட்டத்தை ஏற்கனவே ஆட்சியில் இருந்த அரசாங்கம் இத்திட்டத்தை அமுல்படுத்த முயன்ற போது தற்போதைய தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர், அதனைக் கேலி செய்து எதிர்ப்பினை தெரிவித்திருந்தமை அவரது சமூக ஊடக கணக்குகளில் காணப்பட்டது.
அது போன்ற சிறந்த நிலையில் இருந்த ஒருவர், தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சரான பின்னர், இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதானது வருந்தத்தக்கது.
கஞ்சாவை சட்டப்பூர்வ பொருளாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் காணப்பட்டாலும், உலகளாவிய ரீதியில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவதற்கான முயற்சியானது, பொதுமக்களின் எதிர்ப்பு மற்றும் அறிஞர்களின் எதிர்ப்பால் தோல்வியடைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
எனவே, இது கஞ்சா வியாபாரத்தின் இறுதி இலக்கை அடையப் பயன்படுத்தப்படும் ஒரு மூலோபாயத் திட்டமாகும்.
புதிய அரசாங்கம் அந்த திட்டத்தின் ஒரு தரப்பாக மாறியுள்ளது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.
சர்வதேச சந்தையில் கஞ்சா அதிகமாக காணப்படுகின்றது, எனினும் சர்வதேச ரீதியாக தேவை அதிகரிக்கவில்லை, சந்தையின் இடைவெளி நிரப்பப்பட்டுள்ளது. ஆகவே சர்வதேச ரீதியாக கஞ்சா சந்தை தற்போது வளர்ச்சியை நோக்கிச் செல்ல முடியாது.
பொருளாதார நன்மைகள் என்று கூறும் தவறான அறிக்கைகளின் அடிப்படையில் இது போன்ற முடிவுகளை எடுப்பதன் மூலம் எமது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மேலும் அதிகரித்து பல பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும் ஒரு சூழ்நிலை ஏற்படும் என்பதை மிகுந்த வருத்தத்துடன் கூற வேண்டும்.
தற்போதைய அரசாங்கம் அத்தகைய முடிவை எட்டியுள்ளது ஆச்சரியமாகவும், சந்தேகமாகவும் உள்ளது.
குறிப்பாக, முந்தைய அரசாங்கங்கள் எடுத்த பல நடவடிக்கைகளை விமர்சித்து தடுத்து நிறுத்தும் தற்போதைய அரசாங்கம், முந்தைய அரசாங்கங்கள் கொண்டு வந்த திட்டத்தை இவ்வளவு விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுப்பது மிகவும் வலுவான சந்தேகங்களை எழுப்புகிறது.
கஞ்சா பயிர்ச்செய்கை சட்டரீதியாக்கப்படின், இந்த முடிவு எதிர்காலத்தில் நமது நாட்டின் சுகாதாரம், சமூகம், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் நாட்டை பின்னோக்கிக் கொண்டு செல்லும் ஒரு திட்டமாகும் என்பதை இறுதியாக நாம் வலியுறுத்துகின்றோம்.
மக்களின் நட்பு அரசாங்கமாக, இந்த முடிவை உடனடியாக மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட வேண்டும் என்று மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் வலியுறுத்தியுள்ளது.