ஜூட் சமந்த
கடலில் மூழ்கிய எலீஷா (Elisha) கப்பலில் இருந்து இலங்கையின் மேற்கு கடற்கரைக்கு அடித்து வரப்பட்ட பிளாஸ்டிக் மணிகளை (Plastic beads) அகற்றும் வேலைத்திட்டத்தை சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) ஆரம்பித்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி, இந்தியாவின் கேரளா மாநிலத்திற்கு அருகில் உள்ள இந்தியக் கடல் பகுதியில், லைபீரியக் கொடியின் கீழ் பயணித்த எலீஷா கப்பல் தீப்பிடித்து அழிந்தது. இந்த விபத்து நடந்து 10 நாட்களுக்குப் பிறகு, கப்பலில் இருந்த பொருட்கள் இலங்கையின் மேற்கு கடற்கரையை வந்தடைந்தன.
கடந்த ஆண்டு ஜூன் மாத முதல் வாரத்தில், சிலாபம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளில் பெருமளவிலான பிளாஸ்டிக் மணிகள் கண்டறியப்பட்டன. இவை எலீஷா கப்பலில் இருந்தவை என சூழலியலாளர்கள் உறுதிப்படுத்தியதோடு, இதனால் பாரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது வென்னப்புவ – நைனாமடு முதல் கல்பிட்டி வரை அடையாளம் காணப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இந்த மணிகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகளின் மேற்பார்வையில், அந்தந்தப் பகுதிகளில் இருந்து பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள், கடற்கரையில் உள்ள கற்கள் மற்றும் சிப்பிகளுக்கு இடையில் சிக்கியுள்ள பிளாஸ்டிக் மணிகளை மிகவும் அவதானமாகப் பிரித்தெடுத்து அகற்றி வருகின்றனர்.
இந்த வேலைத்திட்டத்தின் போது பிளாஸ்டிக் மணிகளுக்கு மேலதிகமாக, கடற்கரையில் காணப்படும் ஏனைய கழிவுகளும் அகற்றப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.




