கிளிநொச்சி மாவட்டத்தின் தட்டுவன்கொட்டி பகுதியில் கடந்த 15 வருடங்களாக வசித்து வரும் மக்கள் தற்போது புதிய ஒரு பிரச்சினைக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
தமது பகுதியில் தற்பொழுதும் சில பகுதிகளில் வெடிக்காத நிலையில் கண்ணிவெடிகள் இணங்காணப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தமது பகுதியில் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் தமது நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பெரும் அச்ச நிலைமையை ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே மீண்டும் ஒருமுறை தமது பகுதியில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் குழுவினர் தமது பணியினை மீழவும் ஒருமுறை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமது பகுதியில் 100 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், தமது பகுதியில் இருந்து எந்த ஒரு அவசர தேவை கருதி செல்வதாயின் போக்குவரத்து வசதிகள் இன்மையால் தனியார் வாகனங்களிலே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மேலும் வைத்தியசாலை செல்வதற்கு நோயாளர் காவு வண்டிகளே வந்து தம்மை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்வதாகவும், தமது வாழ்வாதாரமாக கடற்தொழிலை மாத்திரமே மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த பகுதியில் இருவர் சட்ட விரோதமான முறையில் வெடிக்காத நிலையில் இருந்த வெடி பொருளை வெட்ட முயன்போது ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அன்றைய தினமே வெடிக்காத நிலையில் இரண்டு எரிகனைகள் இனங்காணப்பட்டு போலீசாரால் மீட்கப்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக தமது பகுதிகளில் இருப்பவர்கள் பெரும் அச்ச நிலைமையுடன் வாழ்ந்து வருவதாகவும், எனவே இதற்கு உரிய தீர்வினை பெற்றுத் தரும் வகையில் விரைவாக தமது பகுதியில் மீளவும் ஒரு முறை கண்ணிவெடி அகற்றும் குழுவினர் கண்ணிவெடியை அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
