கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்கள் வசிக்கும் ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட “கோழைத்தனமான இஸ்ரேலிய தாக்குதலை” கத்தார் வெளியுறவு அமைச்சகம் கடுமையாகக் கண்டித்துள்ளது.
மேலும் இந்தத் தாக்குதலை “அனைத்து சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின் அப்பட்டமான மீறல்” என்று கத்தார் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த பொறுப்பற்ற இஸ்ரேலிய நடத்தையையும், பிராந்திய பாதுகாப்பில் அதன் தொடர்ச்சியான குறுக்கீட்டையும், அதன் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை குறிவைக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் கத்தார் அரசு பொறுத்துக்கொள்ளாது என்று கத்தார் தெரிவித்துள்ளது.
என்று அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி செவ்வாயன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இத்தாக்குதல் குறித்து உயர் மட்டத்தில் விசாரணைகள் நடந்து வருகின்றன எனவும் மேலும் விவரங்கள் கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை தோஹாவில் தாக்குதலை இஸ்ரேலிய இராணுவம் நடத்தியதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
“ஹமாஸின் உயர்மட்ட தலைவர்களுக்கு எதிரான இன்றைய நடவடிக்கை முற்றிலும் சுதந்திரமான இஸ்ரேலிய நடவடிக்கை” என்று நெதன்யாகு சமூக ஊடகப் பதிவில் தெரிவித்தார்.
“இஸ்ரேல் அதைத் தொடங்கியது, இஸ்ரேல் அதை நடத்தியது, இஸ்ரேல் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சமீபத்திய காசா போர் நிறுத்த முன்மொழிவை பரிசீலிக்க ஹமாஸின் பேச்சுவார்த்தையாளர்கள் ஒன்றுகூடிய நிலையில் இந்த தாக்குதல் நடந்ததாக ஹமாஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய மத்தியஸ்தராகவும், அமெரிக்க துருப்புக்களை வைத்திருக்கும் பிராந்தியத்தின் மிகப்பெரிய அமெரிக்க இராணுவ தளமான அல் உதெய்த் விமான தளத்தின் தாயகமாகவும் இருக்கும் கத்தாரில் இஸ்ரேல் நடத்திய முதல் தாக்குதல் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.
