கனடா உடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படுவதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.
அந்த வகையில், கனடாவை அமெரிக்காவோடு இணைப்பது குறித்து அவ்வபோது பேசி வந்த அவர், கனடாவிற்கு அதிக வரிவிதிப்பையும் அமல்படுத்தி உள்ளார். இதற்கிடையே, கனடாவின் பிரதமராக ஒன்பது ஆண்டுகள் பதவி வகித்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியதை அடுத்து, மார்க் கார்னி லிபரல் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரதமரானார்.
மார்க் கார்னி பிரதமரான பின்பும் அமெரிக்காவை எதிர்த்து வந்தார். இந்தச் சூழலில், அமெரிக்காவிற்குச் சமீபத்தில் பயணம் மேற்கொண்ட கனடா பிரதமர் மார்க் கார்னி, வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்பைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில், கனடாவின் வரிவிதிப்பு தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கனடா உடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படுவதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தொலைக்காட்சியில் விளம்பரம் வெளியானதைத் தொடர்ந்து ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகன் வர்த்தக வரிகள் பற்றிப் பேசியதை, கனடா தனது விளம்பரத்தில் தவறாகச் சித்திரித்திருப்பதாக அதிபர் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். வரி விதிப்பு குறித்து எதிர்மறையாகப் பேசும் ரீகனின் விளம்பரங்களைக் கனடா தவறாகப் பயன்படுத்தியதாகவும் அது போலியானது என்றும் அண்மையில் ரொனால்டு ரீகன் அறக்கட்டளை அறிவித்திருந்ததை ட்ரம்ப் சுட்டிக்காட்டினார். மேலும், அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வரிகள் மிகவும் முக்கியமானவை என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கடுமையான அமெரிக்க வரி விதிப்பிற்குத் தளர்வு வழங்கக் கோரி கனடா பிரதமர் மார்க் கார்னி ட்ரம்பைச் சந்தித்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த எதிர்பாரா முடிவு வெளிவந்துள்ளது. முன்னதாக, ”அமெரிக்கா அல்லாத பிற நாடுகளுக்குச் செய்யப்படும் ஏற்றுமதி அடுத்த பத்து ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரிக்கப்படும், அதேநேரத்தில், உள்நாட்டு முதலீடும் உள்கட்டமைப்பும் வரும் பட்ஜெட்டில் அதிகரிக்கப்படும். பல தசாப்தங்களாக நீடித்துவந்த அமெரிக்காவுடனான நெருக்கமான பொருளாதார உறவு முடிந்தது” என்று மார்க் கார்னி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.


