கனடா நாட்டின் புதிய பிரதமராக மார்க் கார்னி சமீபத்தில் தான் பதவியேற்றிருந்தார். இதற்கிடையே கனடாவுக்கு மாபெரும் அச்சுறுத்தலாக டிரம்ப் உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மார்க் கார்னி, இந்த இக்கட்டான சூழலில் வழிநடத்த யார் தகுதியானவர் என்பதைக் கனடா மக்கள் தேர்வு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும், அங்கு வரும் ஏப்ரல் 28ம் தேதி தேர்தலுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
கனடா நாட்டில் இத்தனை காலம் பிரதமராக இருந்தவர் ஜஸ்டின் ட்ரூடோ. இருப்பினும், பல்வேறு காரணங்களால் அவருக்கான அழுத்தம் அதிகரித்தது. இதனால் வேறு வழியின்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக மார்க் கார்னி அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்றார்.
அங்கு கடைசியாக 2021ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. அந்நாட்டின் சட்டப்படி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி இந்தாண்டு அங்குத் தேர்தல் நடத்த வேண்டி இருந்தது. அங்குப் பிரதமர் பதவியும் கைமாறிய நிலையில், விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. விரைவில் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
இந்தச் சூழலில் தான் நாடாளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பை அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்னி வெளியிட்டுள்ளார். அதன்படி அங்கு வரும் ஏப்ரல் 28ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கனடாவுக்கு எதிராக இறக்குமதி வரிகளை அறிவித்துள்ள நிலையில், அதைக் குறிப்பிட்டு இதுபோன்ற முக்கியமான தருணங்களில் நாட்டை யார் வழிநடத்த வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
கனடாவைப் பொறுத்தவரை ஆளும் லிபரல் கட்சிக்கும் கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி. அங்கு ட்ரூடோ இருந்தவரை கன்சர்வேடிவ் கட்சிக்கான ஆதரவே அதிகமாக இருந்தது. ஆனால், கார்னி பதவியேற்றவுடன் நிலைமை மாறியுள்ளது. தற்போதைய சர்வேக்களில் கன்சர்வேடிவ் கட்சியைக் காட்டிலும் லிபரல் கட்சிக்கான ஆதரவு சற்று அதிகமாக இருக்கிறது. இருப்பினும், தேர்தலில் கடும் போட்டி இருக்கும் என்றே கூறப்படுகிறது.