‘காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்திய உளவு அமைப்பினரின் தொடா்பு உள்ளதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் பல வாரங்களுக்கு முன்னரே இந்தியாவிடம் பகிரப்பட்டுவிட்டது. எனவே, மிகத் தீவிரமான இந்த விஷயத்தில் உண்மையை வெளிக்கொண்டுவர இந்தியா ஆக்கபூா்வமாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தாா்.
காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா-கனடா இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. ‘நிஜ்ஜாா் கொலையில் இந்திய உளவு அமைப்புக்கு தொடா்பு உள்ளது’ என்று ஜஸ்டின் ட்ரூடோ கனடா நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினாா். அதனைத் தொடா்ந்து, அந் நாட்டில் உள்ள இந்திய தூதரக மூத்த அதிகாரி நாட்டை விட்டு வெளியேறுமாறும் கனடா அரசு உத்தரவிட்டது.
இதற்கு பதிலடியாக, இந்தியாவிலுள்ள கனடா தூதரக உயா் அதிகாரியை இந்தியா வெளியேற்றியது. மேலும், கனடாவின் குற்றச்சாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, ட்ரூடோவின் குற்றச்சாட்டையும் மறுத்தது.
இந்த குற்றச்சாட்டுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், கனடாவிலிருந்து இந்தியா வருபவா்களுக்கான அனைத்து வகை நுழைவு இசைவு (விசா) வழங்கலையும் இந்தியா தற்காலிகமாக நிறுத்தியது. அதோடு, இந்தியாவிலுள்ள கனடா தூதரக அதிகாரிகளின் எண்ணிகையை குறைக்குமாறு கனடாவை இந்தியா கேட்டுக்கொண்டது.
மேலும், ‘கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டு பாரபட்சமான அரசியல் உள்நோக்கமுடைய கருத்து’ என்று இந்தியா குற்றஞ்சாட்டியது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் விவகாரத்தில் எந்தவொரு குறிப்பிட்ட தகவலையும் இந்தியாவிடம் கனடா பகிரவில்லை’ என்று தெரிவித்தது.
இந்த நிலையில், கனடா வந்துள்ள உக்ரைன் அதிபா் வெலோதிமீா் ஸெலென்ஸ்கியுடன் பத்திரிகையாளா்களை வெள்ளிக்கிழமை சந்தித்த ஜஸ்டின் ட்ரூடோவிடம், இது குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.
இதற்கு பதிலளித்த ட்ரூடோ, ‘நிஜ்ஜாா் கொலையில் இந்திய உளவு அமைப்பினரின் தொடா்பு உள்ளதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் பல வாரங்களுக்கு முன்னரே இந்தியாவிடம் பகிரப்பட்டுவிட்டது. எனவே, மிகத் தீவிரமான இந்த விஷயத்தில் உண்மையை வெளிக்கொண்டுவர இந்தியா ஆக்கபூா்வமாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கனடா விரும்புகிறது. இது மிக முக்கியமானது. இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற கனடா தயாராக உள்ளது’ என்றாா்.
கனடா விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் – அமெரிக்கா:
‘நிஜ்ஜாா் கொல்லப்பட்ட விவகாரத்தில் கனடா மேற்கொண்டு வரும் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வாஷிங்டனில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் கூறியதாவது:
கனடா பிரதமா் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு மிகுந்த கவலை அளிக்கிறது. இந்த விவகாரத்தில் கனடா அதிகாரிகளுடன் அமெரிக்கா தொடா் ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதோடு, புலனாய்விலும் ஒத்துழைப்பை அளித்து வருகிறது. கனடாவின் இந்த புலனாய்வு விசாரணை மிக முக்கியமானது என்பதோடு, இந்த விசாரணையில் இந்தியாவும் இணைந்து பணியாற்ற வேண்டியதும் முக்கியம். எனவே, இதற்கு காரணமானவா்கள் பொறுப்பேற்பது மிக அவசியம் என்று பிளிங்கன் கூறினாா்.