ஜூட் சமந்த
அல்பேனியா, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி, ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆடவர் ஆகியோரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மகரகம பகுதியில் மாணவர் வீசா (Student Visa) பெற்றுத் தரும் நிறுவனம் என்ற போர்வையில், சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தை நடத்தி வந்த பெண் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களிடம் வெளிநாட்டு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி, ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை இவர் மோசடி செய்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த பெண், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் எவ்விதப் பதிவுகளுமின்றி இந்த நிலையத்தை நடத்தி வந்துள்ளார். சோதனையின் போது அங்கிருந்த ஏராளமான வேலைவாய்ப்பு ஒப்பந்த ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். சந்தேக நபரான இந்தப் பெண் நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, இம்மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், ஜப்பானில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த மிகிரிகம பிரதேசத்தைச் சேர்ந்த மற்றுமொரு முகவர் நிலையம் குறித்து மூன்று முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. இதனைத் தொடர்ந்து, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் இரகசியத் திட்டமொன்றின் மூலம் சுற்றிவளைப்பை மேற்கொண்டு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.
இந்தச் சுற்றிவளைப்பின் போது, மோசடியான முறையில் முகவர் நிலையத்தை நடத்தி வந்த மினுவாங்கொடையைச் சேர்ந்த ஒரு பெண்ணும், அவருக்கு உதவியாக இருந்த ஜா-எல பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் அத்தனகல்ல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, பிரதான சந்தேக நபரான பெண் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இரண்டாவது சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


