தேசிய காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் ஏ. எல். எம். அதாவுல்லா அவர்களின் தலைமையில், கண்டி மாவட்டம் கம்பளை பிரதேசம் கேட்வே மஹல்லா பள்ளிவாயல் முன்பாக வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரமாக செயற்படுகின்றனர்.
இந்த செயற்பாட்டில் முன்னாள் மேயர் அதாவுல்லா அஹம்மட் சகி, மாநகர சபை பிரதி முதல்வர் யூ. எல். உவைஸ், மாநகர சபை உறுப்பினர் ஏ. எல். தவம் மற்றும் உறுப்பினர்கள், மாநகர சபை ஊழியர்கள் , அக்கரைப்பற்று தொண்டர்கள் என அனைவரும் நேரடியாக களத்தில் இருந்து சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை கம்பளை பிரதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து அப்பகுதியில் மனிதாபிமான செயற்பாடுகளுக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் நேரில் விஜயம் செய்து காத்தான்குடி மற்றும் ஏறாவூர் நகர சபை உறுப்பினர்களை ஒருங்கிணைத்து சுத்தம் செய்யும் பணிகளை முன்னெடுத்து வருகிறார்.
மக்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் முதன்மைக்கொண்டு, சேதமடைந்த பகுதிகளை சீரமைப்பதில் அவர் காட்டும் அர்ப்பணிப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அனர்த்த நிலைமைகள் தொடர்பாக கம்பளை முஸ்லிம் கவுன்சில் நிர்வாகிகளுடன் இன்று (10), நடைபெற்ற கலந்துரையாடலிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பிரதித் தலைவர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.








