சமீபத்தில் கம்பளை நகரில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகள், வாழ்வாதாரம், இயல்பு வாழ்க்கை அனைத்தும் பெரிதும் சீர்குழைந்தன. இந்த நேரத்தில், நாடு முழுவதிலும் இருந்து மனமுள்ள நல்ல உள்ளங்கள் வந்து, பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதிலும், நிவாரணப் பொதிகளை எங்கள் மையத்திற்குக் கொண்டு வந்து வழங்குவதிலும் காட்டிய அக்கறைக்கும், தாராள மனப்பான்மைக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்த்துக் கொள்வதாக கம்பளை முஸ்லீம் கவுன்சில் தெரிவித்துளளது.
1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மன்னார் எருக்கலம்பிட்டியில் இருந்து இடம்பெயர்ந்து, புத்தளம் எருக்கலம்பிட்டியில் (நாகவில்லு) பகுதியில் தற்போது வசித்து வருகின்ற மக்களால், சமீபத்தில் ஏற்பட்ட இந்த அனர்த்தத்தின்போது வழங்கப்பட்ட உதவிகளுக்கும், தன்னலமற்ற பங்களிப்புகளுக்கும் தமது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கம்பளை முஸ்லீம் கவுன்சில் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
இடம்பெயர்வின் வலியையும், துன்பங்களையும் நேரடியாக அனுபவித்த எருக்கலம்பிட்டி மக்கள், அதை மறந்துவிடாமல், தனது இன்னொரு சமூகத்தின் வேதனையை உணர்ந்து, உடனடியாக உதவிக்கரம் நீட்டியமை மிகுந்த மனிதாபிமானத்தின் சிறந்த எடுத்துக்காட்டாகும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் எருக்கலம்பிட்டி பிரதேசத்தில் ஊர் மக்களின் பங்களிப்பாக கிடைக்கப்பெற்ற சுமார் 10 லட்சத்து 62ஆயிரத்து 220 ரூபாய்கள், மற்றும் ஊக்கவார்த்தைகள் இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் ஆறுதலாகவும், நம்பிக்கையாகவும் அமைந்தன என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உதவிகள் எப்போதும் எமது நினைவுகளில் நன்றியுடன் நிலைத்திருக்கும் எனவும்
உங்கள் அனைவருக்கும் நல்ல உடல் நலம், அமைதி மற்றும் வளமான எதிர்காலம் அமைய இறைவனை வேண்டி, மீண்டும் ஒருமுறை எமது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிதித் தொகையினை கையளிக்க, புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆகியோர் நேரில் சென்றிருந்தமை விஷேட அம்சமாகும்.



