Sponsored Advertisement
HomeWorld Newsகர்நாடகாவில் காங்கிரஸ் அறுதிப்பெரும்பான்மை வெற்றி..

கர்நாடகாவில் காங்கிரஸ் அறுதிப்பெரும்பான்மை வெற்றி..

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றிப்பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இதற்கு காங்., தலைவர்கள் கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை இன்று (மே 13) நடைபெற்றது. இதில் பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை விட கூடுதலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருவதால், அக்கட்சியே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இதில் கர்நாடக காங்., தலைவர் டி.கே.சிவக்குமார் 70 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

காங். தேசியத்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…

காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். கர்நாடகாவில் மோசமான ஆட்சி நிர்வாகத்துக்கு எதிராக மக்கள் ஓட்டளித்துள்ளனர். முதல்வர் யார் என்பது ஆலோசித்து முடிவெடுக்கப்படும். காங்கிரஸ் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். பிரதமர், உள்துறை அமைச்சர் என பா.ஜ., தனது மொத்த பலத்தையும் செலுத்திய இந்த தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது.

மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் எங்கள் ஆட்சி அமையும். பா.ஜ., நிறுத்தி வைத்துள்ள நல்ல திட்டங்களை நாங்கள் மீண்டும் கொண்டு வருவோம். சோனியா, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் இணைந்து செயல்பட்டதால் வெற்றி சாத்தியமானது.

காங்., முன்னாள் தலைவர் ராகுல்…

கர்நாடக வெற்றிக்காக பாடுபட்ட தொண்டர்கள், தலைவர்களுக்கு இதயத்தில் இருந்து நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஜனநாயகம் வென்றது. முதலாளிகளுக்காக ஆட்சி நடத்தும் பா.ஜ.,வுக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர். முதலாளிகளை கர்நாடக ஏழைகள் தோற்கடித்துள்ளனர். கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் என்றும் துணை நிற்கும். முதல் அமைச்சரவை கூட்டத்தில் 5 முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.

முன்னாள் முதல்வர் சித்தராமையா…

130 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம். இது காங்கிரஸ் கட்சியின் மாபெரும் வெற்றி. கர்நாடக மக்களுக்கு பா.ஜ., ஆட்சியில் அதிருப்தி ஏற்பட்டதால் மாற்றத்தை விரும்பினர். ‘ஆபரேஷன் லோட்டஸ்’ மூலமாக பா.ஜ., குறுக்கு வழியில் ஆட்சியை அமைத்தது. ஆனால் மக்கள் அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர். ராகுலின் பாதயாத்திரை, கட்சியினரை உற்சாகப்படுத்தவும் உதவியது.

இது நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் ஜேபி நட்டாவுக்கு எதிராக மக்கள் அளித்த தீர்ப்பு. பிரதமர் 20 முறை கர்நாடகா வந்தார்; கடந்த காலத்தில் எந்த பிரதமரும் இப்படி பிரசாரம் செய்யவில்லை. பிரதமர் மோடி இங்கு வந்தாலும் எதுவுமே நடக்காது என்று முன்பே கூறினோம். இந்த தேர்தல் முடிவு, லோக்சபா தேர்தலுக்கான படிக்கல். பா.ஜ., அல்லாத அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து பா.ஜ.,வை தோற்கடிக்கும். ராகுல் நாட்டின் பிரதமராக வருவார் என்றும் நம்புகிறேன்.

காங்., தலைவர் டி.கே.சிவக்குமார்…

வெற்றி அனைத்தும் காங்கிரஸ் தலைமையையே சேரும். வெற்றியை கொடுத்த மக்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன். தேர்தல் வெற்றிக்கு உழைத்த சித்தராமையா, தொண்டர்களுக்கு நன்றி. (இவ்வாறு அவர் கூறியபோது, உணர்ச்சி மிகுதியில் ஆனந்த கண்ணீருடன் பேசினார்)

Exit mobile version