கற்பிட்டியில் பிரதேச சபையின் ஏற்பாட்டில் உதயமாகிறது இரவு நேர உணவு விற்பனை நிலையங்கள்!
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி சுற்றுலா துறையை மேம்படுத்தும் முகமாக வாரத்தில் ஒரு நாள் பாதை ஓரங்களில் இரவு நேர உணவு விற்பனை நிலையங்களை திறப்பதற்கான ஏற்பாடுகளை கற்பிட்டி பிரதேச சபை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கற்பிட்டி பிரதேச சபையின் மண்டபத்தில் தவிசாளர் எம் எஸ் எம் றிகாஸ் தலைமையில் இடம்பெற்றது.
கற்பிட்டி பிரதேசத்தில் சுற்றுலாத்துறை மேம்பாட்டு செயல் திட்டத்தின் கீழ் கற்பிட்டி பிரதேச சபையின் ஏற்பாட்டில், கற்பிட்டி பிரதேச எல்லைக்குட்பட்ட சிறு உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபார உணவு உற்பத்தியாளர்கள் வருமானத்தை ஈட்டிக் கொள்ளும் வகையில் கற்பிட்டி பிரதேசத்திற்கு வருகை தருகின்ற சுற்றுலாப் பயணிகளுக்கு ஓர் வினோதமான பொழுதுபோக்குடன் கூடிய உணவு வகைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கோடு இந்த இரவு நேர உணவக செயல் திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது.
இந்த இரவு நேர உணவு விற்பனை நிலையங்கள் எதிர் வரும் செப்டம்பர் 26 ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் மாலை 6:00 மணி தொடக்கம் அதிகாலை ஐந்து மணி வரை கற்பிட்டி அல் அக்ஸா சந்தியிலிருந்து திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கற்பிட்டி பிரதேசம் சுற்றுலா துறையினால் அபிவிருத்தி அடைய உள்ளதுடன், உள்ளூர் உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் உணவு விற்பனையாளர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.