பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தலைமையிலான அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதன்கிழமை (10), பிரான்ஸின் தலைநகர் பாரிஸ் உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் மக்கள் வீதிகளில் இறங்கி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் வாகனங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு தீ வைத்துள்ளனர்.
பொது விடுமுறை நாட்களைக் குறைத்தல், ஓய்வூதியத் தொகையை உயர்த்தாமை மற்றும் கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசியத் துறைகளுக்கான நிதியைக் குறைப்பது போன்ற கடுமையான விடயங்கள் அடங்கிய வரவு – செலவுத்திட்டத்தை பிரான்ஸ் அரசு நிறைவேற்ற முயற்சிப்பது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்ரோன் அரசின் ‘ரினைசன்ஸ்’ கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால், கடந்த ஒன்பது மாதங்களில் நான்கு பிரதமர்கள் மாறியுள்ளனர். அண்மையில், வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்ற முடியாததால், பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு பதவி விலகினார்.
இந்த அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், செபஸ்டியன் லெகோர்னு புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், இதுவும் மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மக்கள் வீதிக்கிறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போராட்டக்காரர்கள் பொலிசாருடன் மோதலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.
