கல்பிட்டி விமானப் படை பயிற்சி முகாமில் போடப்படும் குண்டுகளால் உலகிற்கு சிசுக்கள் பிறக்காமலே கொல்லப்படுவதாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் NTM. தாஹிர் இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.
அவசரகால சட்டம் தொடர்பிலான இன்றைய பாராளுமன்ற சபை அமர்வில் கலந்துகொண்டு பேசியபோதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.
கல்பிட்டி விமானப் படை பயிற்சி முகாமில் போடப்படும் குண்டுகளால், கர்ப்பம் தரித்துள்ள தாய்மார்கள் இரண்டு மாதங்களிலே கர்ப்பம் கலைகின்ற அவள நிலைக்கு உள்ளாகுவதாக பாராளுமன்ற உறுப்பினர் NTM. தாஹிர் குறிப்பிட்டார்.
மேலும் விமானப் படை பயிற்சி முகாமில் பயிற்சி நேரங்களில் போடப்படும் குண்டுகளின் பாகங்கள் சிதறி, அருகிலுள்ள மக்களின் வீடுகளிலும், விவசாய நிலங்களிலும் விழுவதுடன், சில சந்தர்ப்பங்களில் மனித உயிர் சேதங்களும் இதனால் இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் NTM. தாஹிர், பாதுகாப்புப் பிரதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்றார்.
நீண்ட காலமாக இந்த விடயம் தொடராக இடம்பெற்று வருவதால், விமானப் படை பயிற்சி முகாமை அண்டியுள்ள மீன் பிடியாளர்கள் மற்றும் ஊர் மக்கள் பெரும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையை அடுத்து வழங்கப்பட்ட நிதி நிவாரண விடயங்கள் தமக்கு கிடைக்காமையால் புத்தளம், இஸ்மாயீல்புரம் மற்றும் வட்டணைக்கண்டல் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ததாகவும், இதில் ஒரு சிலரை மாத்திரம் இலக்குவைத்து அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான மக்களுக்களுக்கு எதிரான அடக்கு முறை பரிசீலிக்க வேண்டும் என பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அனுர ஜயசேகர அவர்களிடம் கேட்டுக்கொண்டதை அடுத்து, மேற்படி விவகாரத்தைக் கருத்திற் கொள்வதாக பாதுகாப்புப் பிரதி அமைச்சர் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.


