புத்தளம் அறுவாக்காடு பிரதேசத்தில் கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்ட கழிவு குப்பைகள் மீண்டும் கொட்டப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று அதிகாலை எதுவித முன்னறிவித்தலுமின்றி கொள்கலன்களில் நிரப்பப்பட்ட குப்பைகள் புகையிரதம் மூலமாக கொழும்பில் இருந்து கொண்டு வரப்பட்டு அறுவாக்காடு பிரதேசத்தில் கொட்டப்பட்ட நிகழ்வு புத்தளத்தில் மீண்டும் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
சீன செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக கொண்டுவரப்பட்ட சுமார் 20 கொள்கலன்களில் நிரப்பப்பட்ட கழிவு குப்பைகள் ரயில் மூலம் புத்தளம் அறுவாக்காடு பகுதிக்கு கொண்டுவரப்பட்டது.
முதல் கட்டமாக 20 கொள்கலன்களில் கொண்டுவரப்பட்ட கழிவு குப்பைகளில் சுமார் 9 கொள்கலன் குப்பைகள் குறித்த பகுதியில் கொட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் பல கழிவு கொள்கலன்கள் அடுத்த சில நாட்களில் கொண்டுவரப்பட இருந்ததாகவும் அறிய முடிகிறது.
புத்தளம் அருவாக்காடு பகுதிக்கு கழிவு குப்பைகள் கொண்டுவரப்பட்டதை அறிந்த மக்கள் தமது எதிர்ப்புக்களை தெரிவித்ததுடன், குறித்த விடயம் குறித்து புத்தளம் மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்றனர்.
குறித்த பிரச்சினையை ஆராய்ந்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்கள், மேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடனும், விடயத்திற்கு பொறுப்பான கெளரவ அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க அவர்களுடனும் கலந்துரையாடி உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த கழிவு குப்பைகள் கொண்டு வருவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் நாட்களில் புத்தளம் பகுதிக்கு மீண்டும் பல கொள்கலன்களில் கொண்டுவரப்பட இருந்த கழிவு குப்பைகள், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியால் முறியடிக்கப்பட்டதுடன், நேற்று கொண்டுவரப்பட்ட 20 கொள்கலன் குப்பைகளில் 11 கொள்கலன்கள் இன்று திருப்பி அனுப்படுவதற்கான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
குறித்த கழிவு குப்பைகளை மீண்டும் கொழும்புக்கு எடுத்துச் செல்ல கொழும்பிலிருந்து கொள்கலன்கள் அனுப்பப்பட்டுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க தெரிவித்துள்ளமை குறிபிடத்தக்கது.