பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இந்நிலையில் தான் காசாவில் இருந்து இஸ்ரேல் ராணுவம் கழுதைகளை குறிவைத்து திருடி பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்துக்கு அனுப்பி வருகிறதாம். போருக்கு நடுவே காசாவில் இருந்து இஸ்ரேல் ராணுவம் கழுதைகளை திருடுவதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலில் மொத்த காசா நகரமும் உருக்குலைந்துவிட்டது. காசாவில் உள்ள கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் பல லட்சம் பேர் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
தற்போது இஸ்ரேல் ராணுவம் காசாவில் முகாமிட்டு தொடர்ந்து போர் புரிந்து வருகிறது. இதனால் காசாவில் உள்ள மக்கள் பசி, பட்டினியால் வாடி வருகின்றனர். மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதில் இஸ்ரேல் சிக்கலை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனை ஐநா மட்டுமின்றி பல்வேறு சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் கண்டித்துள்ளன.
இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். காசாவில் போர் புரியும் இஸ்ரேல் ஏன் திடீரென்று கழுதைகளை குறிவைத்துள்ளது என்ற கேள்வி உங்கள் மனதுக்குள் எழலாம். இதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது.

அதாவது காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் மற்றும் அவர்களுக்கு உதவும் மக்களை மொத்தமாக அழிக்க வேண்டும் என்று தான் இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இந்த போரின் காரணமாக காசாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் காசா மக்கள் தங்களின் போக்குவரத்து மற்றும் சுமைகளை சுமக்கவும், இடம்பெயரவும் கழுதைகளை தான் பயன்படுத்தி வருகி்னறன.
தண்ணீர், உணவு மற்றும் இறந்தவர்களின் உடல்களை சுமந்து செல்லவும் கழுதைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது இஸ்ரேலின் கண்களை உறுத்தியது. இதனால் தான் கழுதைகளை திருடி வெளிநாடுகளுக்கு இஸ்ரேல் ராணுவம் அனுப்பி வருகிறது. இதன்மூலம் காசாவில் தற்போது உள்ள மக்கள் இன்னும் கூடுதல் சிரமங்களை எதிர்கொள்வார்கள். இதனால் நாளடைவில் அவர்கள் காசாவை விட்டு மொத்தமாக வெளியேறும் வாய்ப்பு ஏற்படலாம் என இஸ்ரேல் நினைக்கிறது.