பொலிதீன் (சிலிசிலி) பைகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தக் கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளைத் தயாரிக்க சுற்றாடல் அமைச்சு தலைமைத்துவம் வகிக்க வேண்டும் என சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியது.
பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது சிலிசிலி பைகளுக்கு கட்டணம் அறவிடும் தீர்மானம் தொடர்பில் குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையின் மூலம் பொலிதீன் பயன்பாடு குறைக்கப்படுமா என்பதை பரிசீலிக்க வேண்டும் என்றும் குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது இந்தப் பைகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை முடிவு செய்த அதிகாரிகள் யார் என்பதையும் குழுவின் தலைவர் வினவினார். சிலிசிலி பைகளுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை என இங்கு ஆஜராகியிருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் நவம்பர் 10 மற்றும் 12 ஆகிய தினங்களில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இங்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் அமைச்சு, சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், குறித்த அமைச்சுக்களின் கீழ் உள்ள பல நிறுவனங்களின் ஆண்டு அறிக்கைகள் மற்றும் செயற்திறன் அறிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.
இக்கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், ரொஷான் அக்மீமன, சதுரி கங்கானி, சுசந்த குமார நவரத்ன, கிட்னன் செல்வராஜ், (சட்டத்தரணி) பாக்ய ஸ்ரீ ஹேரத், (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து, ஜே.சி.அலவத்துவல, (சட்டத்தரணி) சுஜீவ சேனசிங்க மற்றும் உபுல் கித்சிறி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


