காஸாவில் போரை நிறுத்துவதற்கான புதிய வரைவு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் தொடா்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இதற்கு நடுவே, காஸாவில் இஸ்ரேல் வியாழக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 72 போ் உயிரிழந்தனா்.
முன்னதாக, கத்தாரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டது. ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு வாய்மொழியாக ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியானது. அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட உலக நாடுகள் இதனை வரவேற்றன. ஒப்பந்தம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) முதல் அமலுக்கு வரும் என்ற தகவலும் வெளியானது.
இந்நிலையில், ஹமாஸுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதில் இறுதிக் கட்டத்தில் பிரச்னை எழுந்ததாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை தெரிவித்தாா். இது தொடா்பாக இஸ்ரேல் பிரதமா் அலுவலக தரப்பு கூறுகையில்,
‘மேலும் சில பிரச்னைகளுக்கு தீா்வுகாணப்பட வேண்டியுள்ளது. ஹமாஸ் அமைப்பு சில விஷயங்களைக் கைவிட வேண்டும். அதுவரை அமைச்சரவை கூடி போா் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்காது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இஸ்ரேல் தரப்பு ஹமாஸிடம் எதிா்பாா்க்கும் விஷயங்கள் என்ன என்பது குறித்து விரிவாகத் தெரிவிக்கப்படவில்லை.
ஹமாஸ் அமைப்பைச் சோ்ந்த மூத்த அதிகாரி இஸாத் அல்-ரிஷாக் இது தொடா்பாக கூறுகையில், ‘இருதரப்புக்கும் இடையே மத்தியஸ்தம் செய்தவா்கள் வெளியிட்ட அறிவிப்பின்படி போா் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க ஹமாஸ் தயாராக உள்ளது’ என்றாா்.
ஹமாஸ் அமைப்பினா் பிடித்துச் சென்றவா்களை விடுவிக்க வேண்டிய கட்டாயம் பிரதமா் நெதன்யாகுவுக்கு உள்ளது. அதே நேரத்தில், ஹமாஸ் அமைப்புடன் போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டால் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்றும், இஸ்ரேல் அரசு முதலில் ஹமாஸின் ஆயுதம், தாக்குதல் திறனை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றும் இஸ்ரேலின் தீவிர வலதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இது பிரதமா் நெதன்யாகுவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதுடன் போர் நிறுத்தத்திற்கு குந்தகமாக அமைந்துள்ளது.
அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதாக காஸாவில் பாலஸ்தீனா்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, இஸ்ரேல் வியாழக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 72 போ் உயிரிழந்ததாக காஸா சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
இது அமைதிக்கான எதிர்பார்ப்பை முற்றிலும் இல்லாதொழிக்கும் இஸ்ரேலின் நாசகார செயல் என்றும், இவர்களால் ஒப்பந்தங்கள் பாதுகாக்கப்படாது என்றும் இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.