Friday, April 4, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகிளிநொச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

கிளிநொச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இ.சந்திரசேகரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (28.03.2025) இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு, கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரனின் அழைப்பின்பேரில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்துகொண்டார்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் வரவேற்புரையாற்றிய மாவட்டச் செயலர், உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளரால் நிபந்தனைகளின் அடிப்படையில் இந்தக் கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்,

அரசாங்கத்தின் கொள்கையை நடைமுறைப்படுத்த போதுமான நிதி வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமங்களை நோக்கிய நிதிப்பாய்ச்சலை மேற்கொள்ளவே அரசாங்கம் விரும்புகின்றது. மேலும் ஒதுக்கப்படும் நிதியில் ஒரு சதமேனும் திருப்பி அனுப்பப்படாமல் இந்த ஆண்டுக்குள்ளேயே செலவு செய்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளைக் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்காக 9 திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. அதில் 7 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் எஞ்சிய 2 திட்டங்களுக்கும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதியைப்பெற்ற பின்னர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கு சமர்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் 13 மில்லியன் ரூபாவுக்கான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்துக்கான நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டத்துக்கான நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை முன்வைத்த திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு உலக வங்கி நிதி உதவி வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் 4 பிரதேச செயலர் பிரிவுகளிலும் தலா 3 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு கிராமத்துக்கும் 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்காக தெரிவு செய்யப்பட்ட கிராமங்களுக்கு ஒருங்கிணைப்புக்குழு அனுமதி வழங்கியது.

பூநகரி, கரைச்சி, கண்டாவளை ஆகிய 3 பிரதேச செயலர் பிரிவுகளின் கீழ் 2 வேறு திட்டங்களில் காற்றாலை மின்திட்டங்கள் முன்னெடுப்பதற்கான திட்ட முன்மொழிவுகள் நிலைபேறு சக்தி அதிகார சபையால் முன்வைக்கப்பட்டன. இவை தொடர்பில் பல்வேறு கருத்தாடல்கள் இடம்பெற்றன. சம்பந்தப்பட்ட கிராம மக்களுடன் கலந்துரையாடி பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதியைப்பெற்று அடுத்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டது.

மீள்குடியேறியவர்களுக்கான வீட்டுத்திட்டத்துக்கான அனுமதி ஒருங்கிணைப்புக்குழுவால் வழங்கப்பட்டது. அதேவேளை, 0.6 மில்லியன் ரூபா பெறுமதியான வீட்டுக்கு பயனாளிகள் விருப்பம் தெரிவிக்காமையால் அந்த நிதியை, தேசிய வீடமைப்பு அதிகார சபையால் கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் உள்ள வீட்டுத் திட்டங்களுக்கு வழங்க அமைச்சுக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக இதன்போது மாவட்டச் செயலரால் தெரியப்படுத்தப்பட்டது.

கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட வீதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன் இந்த ஆண்டு 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நிதி 5 மாவட்டங்களுக்கு சமனாக பகிரப்படுவதாக ஆளுநர் தெரிவித்தார்.

மேலும், 2026ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்துக்கான தெரிவுகள் இந்த ஆண்டு மே மாதத்துக்குள் நிறைவு செய்யப்பட வேண்டியுள்ளதால், தற்போது தெரிவு செய்யப்படாத வீதிகள் அதில் உள்ளடக்கப்படும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார். அத்துடன், இந்த ஆண்டு கிடைக்கப்பெறும் நிதியை உரிய காலத்துக்குள் நிறைவு செய்தால் மேலதிக நிதியைக் கோருவதற்கும் வாய்ப்பு உள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

கமநல அபிவிருத்தித் திணைக்களத்தால் குளங்களின் திருத்தத்துக்கான முன்மொழிவுகளும், விவசாய வீதி திருத்தங்களுக்கும் முன்மொழிவு முன்வைக்கப்பட்ட நிலையில் ஒருங்கிணைப்புக்குழு அதற்கு அனுமதி வழங்கியது. அதேபோன்று அனர்த்த முகாமைத்துவ பிரிவின் செயற்றிட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் அறிவியல் நகர் அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் நீண்ட கருத்தாடல்கள் இடம்பெற்றன. இந்தத் திட்டத்தை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுவில் சமர்ப்பித்து அனுமதியைப் பெற்ற பின்னர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கு சமர்பிக்குமாறு கோரப்பட்டது.
அதன் பின்னர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கௌரவ அமைச்சருமான இ.சந்திரசேகரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்த பிரேரணைகள் தொடர்பில் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், கல்மடுக்குளத்தை இரண்டு அடி உயர்த்தி அபிவிருத்தி செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டபோதும் அதனை முன்னெடுப்பதற்கு வனவளத் திணைக்களத்தால் இடையூறு இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. அதைப்போன்று வன்னேரிக்குளம், தேவன்கட்டுக்குளத்தை இணைத்து அபிவிருத்தி செய்வதன் மூலம், மேலதிகமாக 600 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை செய்ய முடியும். ஆனால் இந்த அபிவிருத்திப்பணியையும் முன்னெடுக்க வனவளத் திணைக்களம் தடையாக இருக்கின்றது என்றும் குறிப்பிடப்பட்டது. திட்டங்களை இந்த ஆண்டுக்குள் நிறைவுசெய்யாவிட்டால், நிதி திரும்பும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இரு திட்டங்களையும் நிறைவேற்ற ஒருங்கிணைப்புக்குழு ஒப்புதல் வழங்கியதுடன், இது தொடர்பில் வனவளத் திணைக்களத்துடன் கலந்துரையாடவும் தீர்மானிக்கப்பட்டது.

இதன் பின்னர் கடந்த ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் ஆராயப்பட்ட விடயங்களின் முன்னேற்றம் தொடர்பிலும் ஒவ்வொரு விடயமாக ஆராயப்பட்டது. மதுபானசாலை அனுமதிகள், சட்டவிரோத மணல் அகழ்வு என்பன தொடர்பில் நீண்ட கருத்தாடல்கள் நடைபெற்றன.

இன்றைய ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், ஜெ.றஜீவன், க.இளங்குமரன், இ.அர்ச்சுனா ஆகியோரும், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular