உக்ரைன் மீதான தாக்குதலின்போது ரஷ்ய ட்ரோன்கள் நேட்டோ உறுப்பு நாடுகளான ருமேனியா மற்றும் போலந்தின் வான்பரப்பில் ஊடுருவிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து, ருமேனியா எல்லையோர பகுதிகளில் அவ்வப்போது ரஷ்ய ட்ரோன்களின் பாகங்கள் விழுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்த சூழலில், கடந்த வாரம் நேட்டோ உறுப்பு நாடான போலந்தின் வான்பரப்பில் ரஷ்ய ட்ரோன்கள் ஊடுருவியதாகவும், அவற்றில் சிலவற்றை சுட்டு வீழ்த்தியதாகவும் போலந்து ராணுவம் தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக, தற்போது ருமேனியாவின் வான்பரப்பிலும் ரஷ்ய ட்ரோன் ஒன்று ஊடுருவியதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியபோது, இந்த ட்ரோன் ருமேனிய வான்பரப்பிற்குள் நுழைந்ததை ரேடாரில் கண்டறிந்ததாகவும், உடனடியாக இரண்டு எஃப்-16 ரக போர் விமானங்கள் விரட்டிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில்லா வெச்சே என்ற எல்லையோர கிராமத்தின் அருகே அந்த ட்ரோன் ரேடார் பார்வையில் இருந்து திடீரென மறைந்துள்ளது.
இந்த ட்ரோன் குடியிருப்பு பகுதிகள் மீது பறக்காததால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த ஊடுருவல் தற்செயலானது அல்ல என்றும், இது போரை விரிவுபடுத்த ரஷ்யா வெளிப்படையான முயற்சி செய்கிறது என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், அந்த ட்ரோன் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் ருமேனியாவிற்குள் ஊடுருவி, நேட்டோ வான்பரப்பில் 50 நிமிடங்கள் வரை பறந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தொடர் ஊடுருவல் சம்பவங்களைத் தொடர்ந்து, நேட்டோ அமைப்பு தனது கிழக்கு எல்லையில் வான் பாதுகாப்பை பலப்படுத்த ‘ஈஸ்டர்ன் சென்ட்ரி’ என்ற புதிய பாதுகாப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் பங்களிப்புடன், எஃப்-16, ரஃபேல், யூரோஃபைட்டர் ரக போர் விமானங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் கிழக்கு ஐரோப்பிய எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தங்கள் வான்பரப்பில் நுழையும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்த ராணுவத்திற்கு அதிகாரம் வழங்கும் சட்டத்தை ருமேனியா நாடாளுமன்றம் சமீபத்தில் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.