தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலை மற்றும் அதிகரித்துள்ள நீர் நுகர்வு காரணமாக, கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அபாயகரமான நிலையை எட்டியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை எச்சரித்துள்ளது.
கொழும்பு நகருக்கு குடிநீர் வழங்கும் பிரதான நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான கலடுவாவ நீர்த்தேக்கத்தில் இன்னும் 20 நாட்களுக்கு மாத்திரமே விநியோகிப்பதற்கான நீர் எஞ்சியுள்ளதாக சபையின் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார இன்று (02) தெரிவித்தார்.
இதேவேளை, லபுகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்னும் 50 நாட்களுக்கு மாத்திரமே நீர் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பமான காலநிலையினால் பொதுமக்களின் நீர் நுகர்வு சடுதியாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக வரும் நாட்களில் குடிநீர் உற்பத்தியில் சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலை ஏற்படும் என தலைவர் சுட்டிக்காட்டினார்.
இதனால் நிலவும் வறட்சியான சூழலைக் கருத்திற்கொண்டு, நுகர்வோர் குடிநீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு பத்தரமுல்லை, பாமன்கடை, வெள்ளவத்தை, நாவல ஆகிய பகுதிகளில் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 1 மணி வரையான மூன்று மணி நேரத்திற்கு இந்த நீர் விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படும்.


