கெஹெல்பத்தர பத்மே ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அண்மையில் கண்டறிந்துள்ளது.
அவருடைய கறுப்புப் பணம், நாட்டின் பிரபல நடிகைகள் மூலம் வெள்ளையாக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மே ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவுக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அதன் பணிப்பாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகலவின் நேரடி மேற்பார்வையிலும், தலைமை பொலிஸ் பரிசோதகர் லின்டன் சில்வாவின் வழிகாட்டலிலும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் பலனாக, மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இன்று (நவம்பர் 1) காலை ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 13 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கெஹெல்பத்தர பத்மேவுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்துள்ளது தெரியவந்துள்ளது.
சந்தேகநபரான வர்த்தகர் பொலிஸாரிடம், ஹினட்டியன மஹேஷ் என்ற குற்றவாளியால் தனக்கு மிரட்டல்கள் மற்றும் கொலை அச்சுறுத்தல்கள் இருந்ததாகவும், கடந்த ஆண்டு அவர் தன்னைக் கொலை செய்ய முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, பாதுகாப்புக்காக கெஹெல்பத்தர பத்மேவிடமிருந்து முதலில் 5 இலட்சம் கோரப்பட்ட 13 தோட்டாக்கள் அடங்கிய கைத்துப்பாக்கியை தாம் மூன்றரை இலட்சம் ரூபாய்க்கு கொள்வனவு செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த சந்தேகநபர் 48 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, கெஹெல்பத்தர பத்மேவுடன் டுபாயில் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஆறு பிரபல நடிகைகளில் ஐந்து பேரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.
கெஹெல்பத்தர பத்மே அந்த நடிகைகளுக்குப் பணம் வழங்கினாரா என்பது குறித்து விசாரணை நடைபெறுவதாகவும், அந்த நடிகைகள் பத்மேவின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கினார்களா என்பது தொடர்பாகவும் விரிவான விசாரணை நடைபெறுவதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அந்தப் பணம், குறித்த நடிகைகளால் பல்வேறு முதலீடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டதா என்பது தொடர்பாகவும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.


