ராணுவ ஆட்சியை அமல் செய்த விவகாரத்தில், கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி, பதவி நீக்கப்பட்ட தென்கொரியா அதிபர் யூன் சுக் இயோலை அதிகாரிகள் கைது செய்தனர்.
கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில், அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் மசோதா தொடர்பாக ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, அந்நாட்டின் அதிபராக இருந்த யூன் சுக் இயோல், 63, அவசரநிலை ராணுவ சட்டத்தை சமீபத்தில் அமல்படுத்தினார். இதற்கு எதிர்க்கட்சிகளும், ஆளுங் கட்சியில் சில எம்.பி.,க்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், சில மணி நேரங்களில் அவசரநிலை அறிவிப்பை யூன் சுக் இயோல் திரும்பப் பெற்றார். இதற்கிடையே, ராணுவ சட்டத்தை பிரகடனம் செய்த யூன் சுக் இயோலை பதவிநீக்க வலியுறுத்தி, அந்நாட்டு பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் வெற்றி பெற்றது; இதையடுத்து, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் யூன் சுக் இயோலுக்கு தென் கொரிய நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்து இருந்தது.
இந்நிலையில், இன்று (ஜன.,03) தென் கொரியா புலன் ஆய்வு அதிகாரிகள், பதவி நீக்கப்பட்ட தென்கொரியா அதிபர் யூன் சுக் இயோல் வீட்டிற்கு சென்று கோர்ட் கைது வாரன்ட் உத்தரவு செயல்படுத்தினர். யூன் சுக் இயோலை அதிகாரிகள் கைது செய்த போது அவரது ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர்.
எனினும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது உத்தரவை செயல்படுத்தினர். இந்த கைது சட்ட விரோதமானது என்று பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபரின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.