ஆளும் கட்சியை பிரதிநிதுத்துவப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் விஷேட சந்திப்பு நேற்று கொழும்பு ரமடா ஹோட்டலில் இடம்பெற்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் சிரேஷ்ட ஆலோசகர்களில் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தலைமையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
ஆளும் கட்சியை பிரதிநிதுத்துவப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், அலிசப்றி ரஹீம், இஷாக் ரஹ்மான், முஷாரப் முதுநபீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீ.சீ.இஸ்மாயீல் மற்றும் வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் கல நிலவரம் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை ஆதரிப்பதன் மூலம் எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகம் அடைந்துகொள்ள உள்ள அபிவிருத்திகள், வேலைத்திட்டங்கள் மற்றும் நாட்டின் ஸ்திரத்தன்மை பற்றி பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெளிவுபடித்தினார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தவிர மாற்று ஜனாதிபதி ஒருவர் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டால் இந்த நாட்டை மூன்று மாதங்களுக்கு கூட அவர்களினால் கொண்டு செல்ல முடியாதென அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் முஸ்லிம் தலைமைகள் சரியான நேரத்தில் எடுக்க தவறிய முடிவுகளினால், முஸ்லிம் சமூகம் மிகவும் பின்னோக்கி சென்றுள்ளதாகவும், முஸ்லிம் மக்களுக்கான அடிப்படை தேவைகள் மற்றும் அபிவிருத்திகள் இல்லாமலாக்கப்பட்டதாகவும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் தெரிவித்தார்.
சில முஸ்லிம் தலைமைகளே முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுத்த நயவஞ்சகர்கள் என ஆக்ரோஷமாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட், ஆளும் அரசாங்கத்துடன் பயணிப்பதன் மூலம் மாதிரமே எதிர்பார்க்கபடுகின்ற அபிவிருத்திகளை பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் கூட்டத்தில் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் பேசுகையில், அரசியல் முதிர்ச்சிகொண்ட, வங்குரோத்து அடைந்த நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்காவினால் மாத்திரமே தற்போதைய சூழலில் நாட்டை முன்னெடுத்து செல்ல முடியும் என தெரிவித்தார்.
இதேவேளை கூட்டதில் கலந்துகொண்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்றி ரஹீம் சில முக்கியமான கருத்துக்களை முன்வைத்தார்.
அவர் பேசுகையில், நாடு பொருளாதார ரீதியாக பாரிய பின்னடைவை சந்தித்திருந்த நிலையில் வேறு எவரும் நாட்டை பொருப்பெடுக்காத தருணத்தில், நாட்டை பொறுப்பேற்று, மிக குறுகிய காலத்தில் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டு, நாட்டை தூக்கி நிறுத்தி சர்வதேச அளவில் நாட்டை திரும்பி பாரக்கவைத்த அதிசிறந்த தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே என அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான ஒரு அதிசயம் வேறு எந்த தலைவர்களாலும் செய்திட முடியாது என குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்றி ரஹீம், இவ்வாறான அதிசயத்தை நிஜமாக நிகழ்த்தி வரலாற்று சாதனை படைத்தவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து ஆளும் கட்சியை பிரதிநிதுத்துவப்படுத்தும் குறித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவாளர்கள் தமது பிரதேசங்களில் உள்ள முக்கிய குறைபாடுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் சிரேஷ்ட ஆலோசகர்களில் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா அவர்களிடம் முன்வைத்தனர்.
மிக முக்கியமாக தீர்க்கப்படவேண்டிய குறைபாடுகளை மிக அவசரமாக தாம் தீர்த்து தருவதாக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா உறுதியளித்தார்.
குறித்த விஷேட சந்திப்பில் அரச உயரதிகாரிகள், அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் ஆளும் கட்சியை பிரதிநிதுத்துவப்படுத்தும் குறித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.