ஜூட் சமந்த
நிலவும் மோசமான வானிலை காரணமாக கொழும்பு – சிலாபம் ரயில் பாதையில் உள்ள பல ரயில் நிலையங்களும் ரயில் தண்டவாளங்களும் மிக மோசமாக சேதமடைந்துள்ளன.
நாத்தாண்டியா மற்றும் மாதம்பே ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள பாதைகளே குறித்த வெள்ளத்தினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
நாத்தாண்டியா மற்றும் வலஹாபிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள ஒரு ரயில் நிலையம் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது.
மேலும் குடாவெவ மற்றும் நெலும்பொகுன ரயில் நிலையங்களுக்கு இடையிலான பாதையில் உள்ள பல ரயில் நிலையங்களும் இவ்வாறு அதிகளவில் சேதமடைந்துள்ளன.
அந்த ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள கடுபிட்டி ஓயாவின் பாலமும் குறித்த வெள்ளத்தினால் கடுமையாக சேதமடைந்துள்ளது.
ஏற்பட்ட கடும் வெள்ளத்தினால் புத்தளம் – கொழும்பு ரயில் பாதையில் பல பகுதிகள் தாழிறங்கி உள்ளத்துடன், நீரில் மூழ்கியும் உள்ளது.
இந்த நிலைமை காரணமாக, கொழும்பு – சிலாபம் பாதையில் உள்ள ரயில் சேவைகள் சில நாட்களுக்கு நாத்தாண்டியா ரயில் நிலையத்திற்கு மட்டுப்படுத்தப்படலாம் என்றும் ரயில்வே ஊழியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




