Sunday, February 23, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகோப் குழு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

கோப் குழு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

🔸 ஸ்மார்ட் யூத்’ கண்காட்சி மற்றும் இசைநிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட ரூ.188 மில்லியனுக்கான காசோலை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் வழங்கப்பட்டமை தொடர்பில் விசாரிப்பதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர் கோப் குழுவில் ஆஜர்

🔸 தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தமை தெளிவாகின்றது – கோப் குழு

🔸 இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவரின் தனிப்பட்ட செயலாளருக்கு அப்பதவிக்கான நியமனத்தைப் பெறுவதற்கான குறைந்தபட்ச தகுதி இல்லையென்பதும் உறுதியானது

🔸 முன்னாள் ஜனாதிபதியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களுக்கு நிதி மோசடியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெளிவாகியுள்ளது – குழு உறுப்பினர்கள்

🔸 முன்னாள் நிதிப் பணிப்பாளர் தனது கடமையை மேற்கொண்ட விதம் குறித்து திருப்தியடைய முடியாது – கோப் குழு

🔸 அரசாங்க அதிகாரிகள் தமது கடமையைச் சரியாகச் செய்வதன் மூலம் தமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் – கோப் குழுவின் தலைவர் அரசாங்க அதிகாரிகளிடம் கோரிக்கை

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களில் கடந்த காலங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்கு கோப் உப குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை யூத் சேர்விஸ் (தனியார்) நிறுவனத்தின் 2022ஆம் ஆண்டு மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை, தற்போதைய செயலாற்றுகை மற்றும் 2021 நவம்பர் 16ஆம் திகதி நடத்தப்பட்ட கோப் குழுவில் வழங்கப்பட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி ஆராயும் நோக்கில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் நேற்றைய முன்தினம் (20) கூடியபோதே இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.

கடந்த 18ஆம் திகதி இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கோப் குழு கூடியதுடன், இதில் பல்வேறு முறைபாடுகள் பற்றிய விபரங்கள் வெளிப்பட்டிருந்தன. இதற்கு அமைய தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர்களைக் கோப் குழு முன்நிலையில் அழைத்து விசாரணைகளைத் தொடர்வதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர்கள் மற்றும் தேவையான அதிகாரிகளை் அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்தக் கலந்துரையாடலில் நிதி முறைகேடுகள் மற்றும் மோசடியான செயற்பாடுகள் பல வெளிப்பட்டதுடன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களில் கடந்த காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்காக கோப் உபகுழுவொன்றை நியமிக்க குழுவின் தலைவர் தீர்மானித்தார். இதற்கு அமைய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாரச்சியின் தலைமையில் கௌரவ உறுப்பினர்களான சமன்மலி குணசிங்க, ஜகத் மனுவர்ன, சுனில் ராஜபக்ஷ, அசித நிரோஷன எகொட விதான மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரைக் கொண்டதாக கோப் உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த உபகுழுவினால் விசாரணைகள் நடத்தப்பட்டு அதன் அறிக்கை கோப் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும்.

ஸ்மார்ட் யூத்’ கண்காட்சி மற்றும் இசைநிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட ரூ.188 மில்லியனுக்கான காசோலை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவரினால் கையொப்பமிடப்பட்டு வழங்கப்பட்டமை தொடர்பில் முதல்நாள் உறுதிப்படுத்தப்பட்ட விடயம் குறித்து சம்பந்தப்பட்ட முன்னாள் தலைவர் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தமையால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. மூன்று நான்கு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்ச்சிகளுக்காக இந்தக் கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். தான் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறும் விடயம் பற்றி ஆச்சரியமடைவதாகவும் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட தினத்தில் பி.ப 2 மணி முதல் பி.ப 5 மணிவரையான காலப்பகுதிக்குள் இந்தக் காசோலையை உறுதிப்படுத்தித் தருமான முன்னாள் தலைவர் தமக்கு அழுத்தம் கொடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கமைய முன்னாள் தலைவர் அழுத்தத்தைப் பிரயோகித்திருப்பது தெளிவாகப் புலப்படுவதாக குழு சுட்டிக்காட்டியது.

அத்துடன், இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவரின் தனிப்பட்ட செயலாளராக நியமிக்கப்பட்டவருக்கு ஆகக் குறைந்த அடிப்படைத் தகுதியும் இல்லையென்பதும் குழுவில் புலப்பட்டது. குறித்த பதவிக்கான நியமனத்தைப் பெற பட்டம் பெற்றிருப்பது அவசியம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்தபோதும், குறித்த தனிப்பட்ட செயலாளரிடம் தகுதியை உறுதிப்படுத்துமாறு கோரியபோதும் அதனை அவர் உறுதிப்படுத்தவில்லையென்றும், அதனால் குறித்த பதவியை அவர் இராஜினாமாச் செய்தார் என்பதும் குழுவின் விசாரணைகளில் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட நபர் குழுவில் ஆஜராகியிருந்ததுடன், அவரிடம் குழு விசாரணைகளை நடத்தியது. அப்போது தான் பட்டக்கல்வியைப் பயின்று வந்ததால் பட்டத்தைப் பூர்த்திசெய்திருக்கவில்லையென்றும் பதிலளித்தார். அத்துடன், அவர் அந்தப் பதவியிலிருந்து விலகி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபையில் பணியாற்றியதாகவும் இங்கு தெரியவந்தது. இந்த நபர் பல்வேறு விடயங்களில் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாக மாகாணப் பணிப்பாளர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இளைஞர் சேவைகள் மன்றத்தினால ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்மார்ட் யூத் புத்தாண்டு விழா தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. சரியான நடைமுறையைப் பின்பற்றாது இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டமை இங்கு தெரியவந்ததுடன், இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவருடைய தேவைக்காக இதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பது தெளிவாவதாகவும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். அதேநேரம், விநியோகஸ்தர்களை இணைத்துக்கொண்டமை குறித்து குழு வினவியதுடன், இதற்குப் பதிலளித்த முன்னாள் தலைவர் தனக்கு ஏராளமான கடிதங்கள் கிடைப்பதாகவும், அவற்றை சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஆற்றுப்படுத்தியதாகவும் கூறினார். இந்த நிகழ்வுக்காக ஜனாதிபதி செயலகத்திலிருந்து நிதி ஒதுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இருப்பினும், இந்த செயல்முறை ஒழுங்கற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது தெளிவாகிறது என்று கோப் குழு சுட்டிக்காட்டியது.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இளைஞர் சேவைகள் மன்றத்தினால் முன்னாள் ஜனாதிபதியின் பிரசார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டமை புலனாவதாக கோப் குழு, இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவரிடம் சுட்டிக்காட்டியது. எனினும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய அதுவரை முன்னெடுக்கப்பட்ட சகல திட்டங்களும் இடைநிறுத்தப்பட்டதுடன், ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து விளையாட்டை மாத்திரம் நோக்காகக் கொண்டு ஸ்மார்ட் ஃபியஸ்டா திட்டம் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டதாக அவர் கூறினார். எனினும், பெயர் மாற்றம் செய்யப்பட்டு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்த ஸ்மார்ட் ஃபியஸ்டா நிகழ்ச்சிக்காக நடத்தப்பட்ட இசைநிகழ்ச்சித் தயாரிப்புக்காக 43 இலட்சம் ரூபா செலவுசெய்யப்பட்டபோதும் தயாரிப்பின் வீடியோ இளைஞர் சேவைகள் மன்றத்திற்குக் கிடைக்கவில்லையென்பதும் குழுவில் தெரியவந்தது. எனினும், இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு குறித்த வீடியோ கிடைத்ததாக முன்னாள் தலைவர் தெரிவித்தார். இது பற்றி ஆராயுமாறு குழு அறிவுறுத்தியது.

மேலும், தேசிய இளைஞர் பொசன் வலயம் மற்றும் யாழ்ப்பாணம் மற்றும் அம்பாறையில் இளைஞர் சந்திப்பு நிகழ்வை நடத்தியமை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக இந்த நிகழ்ச்சிகளுக்காக டபிள்யூ.டி.வீரசிங்க அறக்கட்டளையின் தொடர்பு குறித்து குழு ஆராய்ந்தது. அத்துடன், பெல்வுட் நுண்கலைக் கல்லூரியை புனரமைத்தல் மற்றும் புதிய கட்டடம் அமைப்பது தொடர்பாக 2021 ஆம் ஆண்டு கூடிய கோப் குழு அளித்த பரிந்துரைகளை செயல்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்த விடயங்கள் குறித்து நீண்ட நேரம் குழு கலந்துரையாடியதுடன், முன்னாள் நிதிப் பணிப்பாளர் தனது பதவியில் நடந்துகொண்ட விதம் குறித்து திருப்தியடையவில்லையெனக் குழுவின் தலைவர் தெரிவித்தார். அத்துடன், அரசாங்க அதிகாரிகள் தமது கடமைகளைச் சரியாகச் செய்வதன் மூலம் தம்மைப் பாதுகாத்துக்கொள்வதை உறுதிசெய்துகொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தார்.

இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.எம். அஸ்லம், சமன்மாலி குணசிங்க, கோசல நுவன் ஜெயவீர, சுஜீவ திசாநாயக்க, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, ஜகத் மனுவர்ன, ருவன் மாபலகம, சுனில் ராஜபக்ஷ, தர்மபிரிய விஜேசிங்க, அசித நிரோஷ எகொட விதான, திலின சமரக்கோன், சந்திமா ஹெட்டியாராச்சி மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் பங்கேற்றனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular