2024 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்ற முதல் பொதுக் கூட்டம் நேற்று (16) குருநாகல் சத்தியவாதி மைதானத்தில் நடைபெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியையும் ஐக்கிய மக்கள் கூட்டணியினையும் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொண்டதுடன், குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பெரும் திரளான மக்கள் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கம், ஒப்பந்த அரசியலை அடிப்படையாகக் கொண்ட ஒன்றாக அமையாது எனவும் மக்களுக்கான கொள்கைகளை மாத்திரம் அடிப்படையாகக் கொண்ட அரசாங்கமாக அமையும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
குருணாகலில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நடைமுறை ரீதியாகவும் முற்போக்கு ரீதியாகவும் மக்களுக்காகக் கருத்துக்களை முன்வைத்துப் போராட்டங்களை நடத்தியுள்ளதுடன், ஊழல் மோசடியை இல்லாது ஒழிக்கின்ற நோக்கில் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.
நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு சென்ற ராஜபக்ஸக்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்கள் நிதி மோசடியில் ஈடுபட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருடப்பட்ட நாட்டின் வளங்களையும் திருடப்பட்ட நாட்டின் பணத்தையும் மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காகத் தனிநபர் சட்ட மூலத்தை ஐக்கிய மக்கள் சக்தியே முதலில் சமர்ப்பித்துள்ளது.
மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலைபேசப்படுகின்ற யுகத்தை நிறைவு செய்ய வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், கட்சியின் பொருளாளர் பைசல் காசிம் மற்றும், கட்சியின் தேசிய அமைப்பாளர் எம்.எஸ் தெளபீக் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர்களில் ஒருவரான அலிஸாஹிர் மெளலான நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் இணைந்தமை மக்கள் மத்தியில் பேசும்பொருளாக மாறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.