கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவம் தொடர்பான மரண விசாரணை இன்று (24) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த விசாரணை தொடர்பான சாட்சியங்கள் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் பதிவு செய்யப்பட்டன.
இதன்போது, கொழும்பு குற்றப்பிரிவின் பொலிஸ் சார்ஜென்ட் பண்டாரவின் வழிகாட்டுதலின் கீழ், துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் நீதிமன்ற அறையில் பணியில் இருந்த கெசல்வத்த பொலிஸை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஹேவாபதிரணகே தரங்க சாட்சி வழங்கிய நிலையில், சம்பவம் நடந்த அன்று நீதிமன்ற நடவடிக்கைகள் காலை 9.30 அல்லது 9.35 மணியளவில் ஆரம்பித்ததாக தெரிவித்தார்.
“அன்று ஸ்கைப் தொழில்நுட்பத்தின் மூலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலத்தை நீட்டிக்கும் செயற்பாடு இடம்பெறவிருந்தது. காலை 9:40 மணியளவில் நீதிமன்ற அறையின் மூடப்பட்டிருந்த கதவைத் திறந்து, இரண்டு சிறை அதிகாரிகள் சந்தேக நபர் ஒருவரை திறந்த நீதிமன்றத்திற்குள் அழைத்து வந்தனர். ஒரு சிறை அதிகாரி என்னிடம் வந்து, ‘கணேமுல்ல சஞ்சீவவை அழைத்து வந்துள்ளோம்’ என்று கூறினார். நான் சந்தேக நபரை சிறைக் கூண்டிற்குள் வைக்கச் சொன்னேன்.
அப்போது சிறை அதிகாரி, ‘இந்த சந்தேக நபருக்கு பகைவர்கள் இருப்பதால், கூண்டிற்குள் வைக்க முடியாது’ என்று கூறினார். பின்னர் அவரை பெஞ்சில் உட்கார வைக்கச் சொன்னேன். நீதவான் கேட்டால், நீங்களே காரணங்களை விளக்குங்கள் என்று நான் சிறை அதிகாரியிடம் கூறினேன்.
பின்னர் இந்த சந்தேக நபரை பெஞ்சில் உட்கார வைத்தார்கள். ஏறக்குறைய முப்பது வழக்குகள் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் மூலம் எடுக்கப்பட்ட பிறகு, ஸ்கைப் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் கணேமுல்ல சஞ்சீவவின் வழக்கு அழைக்கப்பட்டது. பிரதிவாதி சாட்சிக் கூண்டிற்கு முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அப்போது நீதவான், சந்தேக நபர் கணேமுல்ல சஞ்சீவவிடம், வழக்குக்கு பிணை இருந்ததா என்று விசாரித்தார். அப்போது கணேமுல்ல சஞ்சீவ, ‘பிணை இல்லை’ என்று கூறினார். அந்த சந்தர்ப்பத்தில் நீதவான், சிறை அதிகாரியிடம், ‘நீதிமன்ற உத்தரவு இல்லாமல் இந்த சந்தேக நபரை ஏன் அழைத்து வந்தீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்க சிறை அதிகாரி முன்னால் வந்தார். அவரால் ‘ஒன்பது’ என்ற வார்த்தையை மட்டுமே சொல்ல முடிந்தது. திடீரென மூன்று அல்லது நான்கு துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டன.
உள்ளே இருந்தவர்கள் கத்த ஆரம்பித்தனர். சட்டத்தரணி உடையணிந்த ஒரு நபர் சாட்சிக் கூண்டு பக்கம் திரும்பி ஏதோ செய்வதைப் பார்த்தேன். அதனுடன் தான் துப்பாக்கிச் சத்தங்கள் வந்தன. அந்த நபரின் முகத்தை நான் பார்க்கவில்லை. அவர் நீல நிற டையை அணிந்திருந்தார். பின்னர் அந்த நபர் கதவைத் திறந்து வெளியே தப்பி ஓடினார். அவர் கையில் எதுவும் இருக்கவில்லை. பின்னர் நான் நீதவான் இருக்கை பக்கம் பார்த்தேன். அங்கு நீதவான் இருக்கவில்லை. பின்னர் நாங்கள் தேடி பார்த்தோம். நீதவான் பெஞ்சுக்கு அடியில் மறைந்து இருந்தார்.
பின்னர் நாங்கள் அவரை பாதுகாப்பாக அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றோம். நீதவான் அதிர்ச்சியடைந்திருந்தார். பின்னர் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்கான சந்தேக நபர் கணேமுல்ல சஞ்சீவ சாட்சிக் கூண்டிற்குள் மேலே தலை தூக்கியவாறு விழுந்து கிடந்தார்.” என்று சாட்சி வழங்கினார்.