கடந்த சில தினங்களாக நாட்டில் பேசும்பொருளாக மாறி இருப்பது சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு கிடைக்கப்பெற்ற கலாநிதி பட்டம் பற்றியதாகும்.
சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு இலங்கையின் எந்தவொரு பல்கலைக்கழகமும் கலாநிதி பட்டம் வழங்கவில்லை என பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் அண்மையில் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், சமூகத்தில் எழுந்த விவாதத்துடன், பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தில் இருந்து அவரது பெயருக்கு முன் இடப்பட்டிருந்த கலாநிதி பட்டமும் நீக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில்; சபாநாயகர் அசோக ரன்வல ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளதாக தெரிவித்த கருத்து பொய்யானது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
அசோக ரன்வல என்ற நபர் தமது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என ஜப்பானின் வசேடா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதாக அவர் செய்தியாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.
இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, திசைகாட்டியில் இருப்போர்கள் உண்மையிலேயே பேராசிரியர்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் மக்கள் மத்தியில் எதிர்மறையான நிலைப்பாடு உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நிலைமை குறித்து சபாநாயகர் அசோக ரன்வல அவர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உரிய நேரத்தில் பதில் அளிப்பதாக தெரிவித்துள்ளதாக டெய்லி சிலோன் இணையம் தெரிவித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு சபாநாயகர் உரிய நேரத்தில் பதில் அளிப்பார் என அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவை அமைச்சரின் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.