சவூதி அரேபியாவின் ரியாத் நகரத்தில் நடைபெறும் 26வது UNWTO பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சவுதி அரேபியாவிற்கு இலங்கை ஜனநாயகக் குடியரசின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் விஜயம் செய்துள்ளார்.
இதன்போது சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் மேன்மை தங்கிய இளவரசர் பைசல் பின் ஃபர்ஹானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வதற்கான செயல்முறைகள் பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டது.
இலங்கையின் தற்போதைய முதலீட்டுக்கு சாதகமான சூழல் குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், மேலும் பல்வேறு துறைகளில் நாட்டில் விரிவடையும் முதலீட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்தக் கோரி சவுதி தனியார் துறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
குறித்த பயணத்தின் போது இரு நாடுகளினதும் வணிக கூட்டமைப்புகளுக்கு இடையே நிறுவப்படவுள்ள முதலாவது வணிக கவுன்சில் பற்றியும் இங்கு விளக்கமளிக்கப்பட்டது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான தனியார் துறை தொடர்புகளை மேம்படுத்துவதற்கான ஒரு ஊக்கியாக செயல்படும்.
பாலஸ்தீன பிரச்சினைக்கு நீடித்த தீர்வைக் கண்டறிவதில் சவுதி அரேபியாவின் பங்களிப்பை பாராட்டிய அமைச்சர் விஜித ஹேரத், பாலஸ்தீன மோதலுக்கான தீர்வு தொடர்பாக இலங்கையின் பாரம்பரிய மற்றும் அசைக்க முடியாத ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இச் சந்திப்பின் போது, இலங்கைக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்ட 50 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சவுதி அஞ்சல் துறை வெளியிட்ட நினைவு முத்திரைகளை சவுதி வெளியுறவு அமைச்சர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.



