நேற்று முன்தினம் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கும், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் இடம்பெற்ற விவாதத்தின் போது, அன் பார்ளிமன்றி அதாவது நாடாளுமன்றத்திற்கு ஒவ்வாத சொற்பிரயோகத்தை அலி சப்ரி பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு இன்று முன்வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இதனை தமது நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டதாக கூறி சபாநாயகரிடம் முறையிட்டார்.
எனினும், அவ்வாறான வர்த்தை பிரயோகத்தை தாம் பயன்படுத்தவில்லை என்றும் அவ்வாறு பயன்படுத்தியிருந்தால் மனித பண்பு கொண்டவர் என்ற அடிப்படையில் அதற்காக மன்னிப்பு கோரவும் அந்த சொல்லாடலை மீளப் பெற தயார் எனவும் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி குறிப்பிட்டார்.
இந்த பதிலுக்கு பின்னர் அலி சப்ரிக்கும், சாணக்கியனுக்கும் இடையில் மீண்டும் வாக்குவாதம் இடம்பெற்றது.
இதன்போது, தமது அரசியலை முன்னிலைப்படுத்தி, சாணக்கியன் செயற்படுவதாக அலி சப்ரி குற்றம் சுமத்தினார்.
எனினும், தாம் நீதியமைச்சராக இருந்த போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த பலரை விடுவித்தமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொவிட் -19 பரவல் நிலைமையின் போது முஸ்லிம்களின் ஜனாசாக்கள் தகனம் செய்யப்பட்ட போது, தாம் அரசாங்கத்தில் இருந்த போதும், அதற்கு எதிராக குரல்கொடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
இதன்போது இனமுறுகலை தாம் தடுக்கும் வகையில் செயற்பட்டதாகவும் சப்ரி தெரிவித்தார்.
தாம் தமிழ் மக்கள் மீது அன்பு கொண்டுள்ளதாகவும் அத்துடன் தாம் இனவாதி அல்லவென்றும் குறிப்பிட்ட அவர், தம்மால் நாடாளுமன்றத்திற்கு ஒவ்வாத வார்த்தை பிரயோகம் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் மீண்டும் தெரிவித்தார்.
இதன்போது குறுக்கீடு செய்த எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று முன்தினம் அமைச்சர் அலி சப்ரி, சாணக்கியனுக்கு எதிராக பயன்படுத்திய வார்த்தை பிரயோகத்தின் பதிவை நாடாளுமன்ற பதிவுப்புத்தகமான ஹன்சார்ட்டின் பிரதியை சபையில் சமர்ப்பித்து, அலி சப்ரி நாடாளுமன்றத்திற்கு ஒவ்வாத வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தியமையை நிரூபித்தார்.
இதன்போது தலையீடு செய்த சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர் அலி சப்ரி ஏற்கனவே இந்த விடயம் தொடர்பில் தமது மன்னிப்பை கோரி விட்டதாக சுட்டிக்காட்டினார்.