Sponsored Advertisement
HomeLocal Newsசார்ள்ஸ் மன்னரின் பங்கேற்புடன் பொதுநலவாய மாநாடு

சார்ள்ஸ் மன்னரின் பங்கேற்புடன் பொதுநலவாய மாநாடு

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் பங்கேற்புடன் நேற்று (05) லண்டனில் நடைபெற்ற  பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன் போது  மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கு வாழ்த்துகளை கூறிய ஜனாதிபதி, அவருடன் சுமூகமாக கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு, இச் சந்திப்பில் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் கலந்துகொண்டார்.

இம்மாநாட்டில் இளையோரின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலான கல்வி மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு பொதுநலவாய அமைப்பு விரிவான திட்டங்களை  முன்னெடுக்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது உரையில் வலியுறுத்தினார்.

டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக தொடர்பாடல்களை வலுப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி கோரினார்.

இம்மாநாட்டிற்கு இணையாக இடம்பெற்ற ‘Fireside Chat’நிகழ்வில் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க கலந்துகொண்டார்.

‘Fireside Chat’ நிகழ்வானது பொதுநலவாய மாநாட்டிற்கு அமைவான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடும் மேடையாகும்.

இதன் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கானா நாட்டு ஜனாதிபதி  நானா எட்டோ அக்குபோ – எட்டோ (Nana Addo Dankwa Akufo-Addo) அவர்களையும்  லண்டனில் சந்தித்து கலந்துரையாடினார்.

இலங்கை மற்றும் கானாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது  ஆராயப்பட்டது.

அதனையடுத்து ருவண்டா ஜனாதிபதி பவுல் ககமே (Paul Kagame)   அவர்களை (05) சந்தித்து ஜனாதிபதி, கலந்துரையாடினார்.

இதன்போது இலங்கை மற்றும் ருவண்டா நாடுகளுக்கிடையிலான உறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டதோடு,  விஷேடமாக விவசாயம் மற்றும் சுகாதார துறை சார்ந்த முதலீடுகளுக்கான வாய்ப்புக்கள் பற்றியும் ஆராயப்பட்டது.

இரு நாடுகளுக்கு இடையிலும் விஜயம் மேற்கொண்டு இரு நாட்டு அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பை அடுத்த கட்டமாக நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இலங்கை மற்றும் ருவண்டாவுக்கு இடையிலான பாதுகாப்பு  ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இயற்கை அனர்த்தங்களின் போதான துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான பயிற்சிகளை வழங்க இலங்கை பாதுகாப்பு படைகளின் ஒத்துழைப்பை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  உடன்பாடு தெரிவித்தார்.

லண்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன மற்றும் சர்வதேச அலுவல்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் பணிப்பாளர் தினுக் கொலம்பகே உள்ளிட்டவர்கள் இச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

Exit mobile version