கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பரவியது போல் இந்தியா உள்ளபட இந்திய பெருங்கடல் பகுதிகளில் உள்ள நாடுகளில் சிக்குன்குனியா நோய் பரவல் அபாயம் இருப்பதாகவும், கடந்த 2004-2005ம் ஆண்டை போல் இந்தியா, இலங்கை உள்பட உலகம் முழுவதும் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரிக்க உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த சிக்குன்குனியா பரவல் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்று உலக சுகாதார அமைப்பு வார்னிங் செய்துள்ளது.
இதுதொடர்பாக ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பின் மருத்துவ அதிகாரி டயானா ரோஜாஸ் அல்வாரெஸ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சிக்குன்குனியா வைரஸ் தொற்று நோய் உலகத்தையே உலுக்கியது. இது இப்போது மீண்டும் பரவும் அபாயம் உள்ளது. இதனால் சிக்குன்குனியா பரவலை தடுக்க தேவையான நடவடிக்கை தேவை. ஏனென்றால் வரலாறு மீண்டும் வருவதை நாங்கள் பார்க்கிறோம். இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் மொத்தம் 119 நாடுகள் உள்ளன. மொத்த மக்கள்தொகை 5.6 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி). தற்போது பல நாடுகளில் மக்கள் அதிக காய்ச்சல், மூட்டு வலியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முன்னதாக 2004 -2005ம் ஆண்டு காலக்கட்டத்தில் சிக்குன்குனியா உலகம் முழுவதும் 5 லட்சம் பேரை பாதித்தது.
குறிப்பாக சிறிய தீவு நாடுகளில் பரவ தொடங்கி உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது அதேபோன்ற நிலை உருவாகி உள்ளது. இந்திய பெருங்கடல் தீவுகளில் லா ரீயூனியன் மயோட் மற்றும் மொரீஷியஸில் பாதிப்பகள் அதிகரித்துள்ளன. இதில் லா ரீயூனியனை எடுத்து கொண்டால் அங்குள்ள மக்கள்தொகையில் 3ல் ஒரு பங்கு மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிக்குன்குனியா ஏற்கனவே மடகாஸ்கர், சோமாலியா மற்றும் கென்யாவிற்கு நுழைந்துவிட்டது. இந்தியா, இலங்கை உள்பட தென்கிழக்கு ஆசியாவில் தொற்றுநோய் பரவலை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பாவிலும் சிக்குன்குனியா பாதிப்பு தொடங்கிஉள்ளது.
மே 1ம் தேதி முதல் பிரான்சிலும் 800 பேர் வரை சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பும் இந்திய பெருங்கடல் தீவுகளில் தான் சிக்குன்குனியா பரவ தொடங்கி உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போதும் இந்திய பெருங்கடல் தீவுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உலக சுகாதார அமைப்பு இந்த எச்சரிக்கையை செய்துள்ளது.
சிக்குன்குனியாவை ஏடிஸ் வகை கொசுக்கள் பரப்புகின்றன. இந்த கொசுக்கள் கடிப்பதன் மூலம் நோய் பரவுகிறது. இந்த கொசுக்கள் பகலில் தான் கடிக்கும். இதனால் பொதுமக்கள் முடிந்தவரை உடல் முழுவதும் மறைக்கும் வகையிலான ஆடைகளை அணிவது நல்லது.
சிக்குன்குனியாவுக்கு என்று பிரத்யேகமாக சிகிச்சை இல்லை. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே சிறந்தது. இதனால் வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மழைக்காலம் என்பதால் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
சிக்குன்குனியாவுக்கு சில அறிகுறிகள் உள்ளன. காய்ச்சல், மூட்டு வலி, மற்றும் தடிப்பு போன்ற அறிகுறிகளைக் கொண்டுள்ளது. சிக்குன்குனியா உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாது எனினும் நோய் பாதிப்பால் சில வாரங்கள் வரை மக்களை முடக்கிப்போடும் சக்தி கொண்டது. இதனால் யாராவது சிக்குன்குனியா அறிகுறி, சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.