தெற்காசிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (SAFTA) பயன்படுத்தி சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் தயாரிப்புகளை அதிகமாக ஏற்றுமதி செய்வது தொடர்பில் வழிவகைகள் பற்றிய குழுவின் கவனத்திற்கு.
வர்த்தகர்களை பதிவு செய்யும் போது வெளிநாட்டுச் சந்தை தொடர்பில் அறிவுறுத்துவதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது
ஏற்றுமதி தொடர்பாக சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு அறிவூட்ட டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் அவசியத்தை குழு சுட்டிக்காட்டியது
தெற்காசிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (SAFTA) பயன்படுத்தி சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் தயாரிப்புகளை அதிகமாக ஏற்றுமதி செய்வது தொடர்பில் பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு கௌரவ பிரதி அமைச்சர் (கலாநிதி) ஹர்ஷண சூரியப்பெரும தலைமையில் அண்மையில் (07) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.
இங்கு தெற்காசிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்கள் மூலம் நாட்டில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களால் பொருட்களை ஏற்றுமதி செய்வதை ஊக்குவிப்பது குறித்து பிரதானமாகக் கலந்துரையாடப்பட்டது. ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள அனைத்து வர்த்தகர்களும் ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கு வருவதால், தேவையான விழிப்புணர்வு ஏற்கனவே அங்கு வழங்கப்பட்டு வருவதாக கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், அதற்கு அப்பாலும் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டுமானால், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியம் என்றும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.

வர்த்தகங்களைப் பதிவு செய்யும் போதே இது தொடர்பான விழிப்புணர்வை வழங்க வேண்டும் என்று குழுவின் தலைவர் இதன்போது தெரிவித்தார். அதற்கு அரச அதிகாரிகள் பாரம்பரிய முறைகளுக்கு அப்பால் பணியாற்ற வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய குழுவின் தலைவர், இதற்காக டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
ஏற்றுமதியை ஊக்குவிப்பது தொடர்பில் ஒரு திட்டத்தை வகுக்க வேண்டியதன் அவசியத்தை குழுவில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். விசேடமாக தேவையான அளவு அந்நியச் செலாவணியை அடைவதற்கு இந்த விழிப்புணர்வு மிகவும் முக்கியமானது என்றும் அதிகாரிகளுக்குக் குழு தெரிவித்தது. அத்துடன், கிராமப்புற மட்டத்தில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழுவின் தலைவர் கேட்டுக் கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான எரங்க வீரரத்ன மற்றும் (பேராசிரியர்) ருவன் ரணசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அர்கம் இல்யாஸ், சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, விஜேசிரி பஸ்நாயக்க, சுனில் பியன்வில, ருவன் மாபலகம, திலிண சமரகோன் மற்றும் சம்பிக ஹெட்டிஆரச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன், நிதி, திட்டமிடல், மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.