Sunday, February 23, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsசிறுவர் நிலையங்களுக்கு 500 மில்லியன் ஒதுக்கீடு!

சிறுவர் நிலையங்களுக்கு 500 மில்லியன் ஒதுக்கீடு!

இலங்கை முழுவதிலுமுள்ள 379 சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு இந்த வருட வரவுசெலவுத்திட்டத்தில் 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின்போதே கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இதனை தெரிவித்தார்.

சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் உள்ள ஒரு குழந்தைக்கு ஒதுக்கப்படும் ஏறத்தாழ 30 ஆயிரம் ரூபா அந்தக் குழந்தைகளுக்குச் சென்றடைகின்றதா என்பதைக் கணக்காய்வு செய்வதற்கு உரிய கட்டமைப்பு இல்லை என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

தற்போதுள்ள சட்டங்கள் போதுமானவை, ஆனால் சட்டத்தை அமுலாக்கும் கட்டமைப்பில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன என்று கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கு ஒதுக்கப்படும் சகல நிதிகளும் சமூக நலனுக்காகவும் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையிலும் திறன்படப் பயன்படுத்தப்படுவது அனைவரினதும் பொறுப்பு என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இலங்கை முழுவதிலும் 379 சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் இயங்குவதாகவும், இவற்றில் 47 நிலையங்கள் அரசாங்கத்திற்குரியது என்றும் கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். ஏனைய அனைத்து சிறுவர் பராமரிப்பு நிலையங்களும் அரசுசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் அனுசரணையுடன் பராமரிக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நாடு முழுவதிலும் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்களின் திறன்களை மேம்படுத்தவும் அவற்றின் பௌதீக வள, மனிதவள மேம்பாட்டிற்கும் இந்த வருட வரவுசெலவுத்திட்டத்தில் 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு உதவிகள், திணைக்களத்தின் ஊடாக பல்வேறு வழிகளிலிருந்து கிடைக்கும் நிதியுதவிகளைக் கருத்தில் கொள்ளும்போது ஒரு சிறுவருக்கு ஏறத்தாழ 30,000 ரூபா ஒதுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்தபோதும் இந்த நிதி அந்தச் சிறுவர்களுக்கு உரிய முறையில் சென்றடைகின்றதா என்பதைக் கணக்காய்வு செய்வதற்கு முறையான கட்டமைப்பு எதுவும் இல்லையென்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

நன்னடைத்தை அதிகாரிகளின் சுற்றிவளைப்புக்களில் சில சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் இதுவரை மூடப்பட்டிருப்பதாகவும், அந்தச் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் சிறுவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். சிறுவர் பராமரிப்பு நிலையங்களை ஒழுங்குறுத்துவதற்கான நடைமுறையொன்று தயாரிக்கப்படும் என கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் பதிலளித்தார்.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு பணமீட்டும் அமைச்சு அல்ல என்றும், மாறாக கிராமப்புற மற்றும் பொருளாதார அடிப்படையில் சமூக நலனை மேம்படுத்துவதற்கு முதன்மையாக பங்களிக்கும் அமைச்சு என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். எனவே, மக்களுக்கு நன்மை செய்வதே முக்கியப் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும், அதற்காக ஒதுக்கப்படும் அனைத்து நிதி மற்றும் ஏனைய ஒதுக்கீடுகளை சமூக நலனுக்காக சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தேசிய அடையாள அட்டை தயாரிப்பதில் உள்ள சிக்கல் நிறைந்த சூழ்நிலையால் பௌத்த பிக்குனிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும், இந்தப் பிரச்சினைகளை விரைவாகத் தீர்ப்பதற்கான வழிமுறையை வகுப்பது குறித்தும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், சூப்பர் மார்க்கட்டுகளுக்கு அருகில் யாசகம் மற்றும் பல்வேறு வியாபார நடவடிக்கைகளில் பாடசாலை சிறுவர்களை ஈடுபடுத்துவது குறித்தும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினர். இதனைத் தடுப்பதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டம் போதுமானதாக இருந்தாலும் அவற்றைச் செயற்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாக குழுவில் ஆஜராகியிருந்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பிரதியமைச்சர் (வைத்தியர்) நாமல் சுதர்ஷன, கௌரவ நீதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நாணயக்கார, கௌரவ புத்தசாசன, மத மற்றும் காலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனவி, கௌரவ கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, அதனுடன் இணைந்த நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular