செய்தியாளர்: ஜியூட் சமந்த
இலங்கை வலுதூக்கும் சம்மேளனத்தினால் (Sri Lanka Powerlifting Federation) ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய விளையாட்டு விழா, கடந்த 14ஆம் திகதி சிலாபம் – பம்பலை பிரதேசத்தில் நாள் முழுவதும் மிகவும் சிறப்பான முறையில் நடந்தேறியது.
உடற்கட்டமைப்பு சம்மேளனத்தின் (Bodybuilding Federation) செயலாளர் ஐ.பி. நந்தசேன மற்றும் அச்சம்மேளனத்தின் உறுப்பினர் வசந்த குமார ஆகியோரின் தலைமையின் கீழ் இந்த விளையாட்டு விழா வைபவரீதியாக ஆரம்பமானது. நாடளாவிய ரீதியில் உள்ள பல்வேறு விளையாட்டு கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவான வீர, வீராங்கனைகள் இப்போட்டிகளில் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தனர்.
பல்வேறு எடைப் பிரிவுகளின் கீழ், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பல போட்டிகள் இங்கு விறுவிறுப்பாக நடத்தப்பட்ட போட்டிகளில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் திறமையான வீர, வீராங்கனைகள் இதில் தங்களது பலத்தை வெளிப்படுத்தினர்.
“விளையாட்டைப் பிரபலப்படுத்தப் போதுமான ஆதரவில்லை” – தலைவர் ஜே.எம். அர்பாத்
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கை வலுதூக்கும் சம்மேளனத்தின் தலைவர் ஜே.எம். அர்பாத் அவர்கள், இந்த விளையாட்டின் தற்போதைய நிலை குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார்:
“இந்த விளையாட்டு இன்னும் நமது நாட்டிற்குப் புதியதுதான். ஆனால், உலகின் பல நாடுகளில் இது மிகவும் பிரபல்யமாக விளையாடப்படுகிறது. கடந்த சில வருடங்களில் நமது நாட்டு வீர, வீராங்கனைகள் பல சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிகளை ஈட்டி நமது தாய்நாட்டுக்குப் பெரும் பெருமை சேர்த்துள்ளனர்.
ஆயினும், இந்த விளையாட்டை நமது நாட்டில் மேலும் பிரபலப்படுத்துவதற்குத் தேவையான அல்லது போதுமான ஆதரவு எவரிடமிருந்தும் கிடைப்பதில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இவ்வாறான சவால்களுக்கு மத்தியிலும், நாம் தற்போது இந்த விளையாட்டை நாட்டின் பல மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். எதிர்காலத்தில் மேலும் பல புதிய வீர, வீராங்கனைகளை இதில் இணைத்துக்கொள்ள நாம் திட்டமிட்டுள்ளோம் என தலைவர் ஜே.எம். அர்பாத் தெரிவித்தார்.



