ஜுட் சமந்த
வீதியில் பயணிக்கும்போது ஒரு நொடிப்பொழுதில் ஏற்படும் கவனக்குறைவு வாழ்நாள் முழுமைக்கும் தீராத சோகத்தை ஏற்படுத்திவிடுகிறது என்பதற்கு மற்றுமொரு சான்றாக சிலாபத்தில் கோர விபத்தொன்று பதிவாகியுள்ளது. பஸ் வண்டியுடன் மோதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் ஒருவர், சுமார் 17 நாட்களாக மரணத்துடன் போராடி இறுதியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பல்லம, பாடசாலை வீதியைச் சேர்ந்த 74 வயதுடைய தென்னகோன் முதியன்சேலாகே டிகிரி பண்டா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த செப்டம்பர் 10ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் சிலாபம் – ஆனமடுவ பிரதான வீதியின் பங்கதெனிய பகுதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
சிலாபத்திலிருந்து ஆனமடுவ நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளானது, அதே திசையில் முன்னால் சென்றுகொண்டிருந்த பஸ்ஸின் பின்பகுதியிலும் பக்கவாட்டிலும் பலமாக மோதியுள்ளது. மோட்டார் சைக்கிளின் அதீத வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனமையே விபத்துக்கு நேரடிக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.
விபத்து இடம்பெற்ற உடனேயே நிலைகுலைந்து வீழ்ந்த முதியவரை, அங்கிருந்த பிரதேசவாசிகள் மீட்டு அவசர அவசரமாக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 27ஆம் திகதி அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இவ்விபத்து தொடர்பில் குறித்த பஸ்ஸைச் செலுத்திய பங்கதெனிய, ஹேன்காய பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய சாரதி சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் சிலாபம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவருக்கு ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன், தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டார். அத்துடன் அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை 2027 மே 27 வரை இடைநிறுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சிலாபம் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.


