இலங்கை கடற்படையினர் சிலாபம் கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 2000 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கடத்த முயன்ற ஒரு இந்தியப் படகு மற்றும் மூன்று இலங்கை படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது நான்கு இந்தியர்கள் உட்பட 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2026 ஏப்ரல் 28 அன்று, சிலாபம் கடற்பரப்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படைக் கப்பல் ஒன்று, சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நான்கு படகுகளை வழிமறித்து சோதனைக்கு உட்படுத்தியது.
இதன்போது, கடலில் வைத்து இந்திய மீன்பிடிப் படகிலிருந்து மூன்று உள்ளூர் டிங்கி படகுகளுக்கு பொதிகளை மாற்றிக் கொண்டிருந்தமை கண்டறியப்பட்டது. கடற்படையினர் நடத்திய தீவிர சோதனையில், அந்தப் படகுகளில் இருந்து 54 பெரிய பைகளில் அடைக்கப்பட்டிருந்த 2000 கிலோவுக்கும் அதிக எடையுள்ள பீடி இலைகள் மீட்கப்பட்டன.
இந்தச் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்:
இந்திய மீன்பிடிப் படகில் இருந்த 18 முதல் 50 வயதுக்குட்பட்ட நான்கு (04) சந்தேக நபர்கள் மற்றும் கடத்தலுக்கு உதவியாகச் செயற்பட்ட கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த 21 முதல் 42 வயதுக்குட்பட்ட ஆறு (06) சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இந்திய மீன்பிடிப் படகு, மூன்று உள்ளூர் டிங்கி படகுகள் மற்றும் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
நாட்டின் கடல் எல்லை ஊடாக இடம்பெறும் இவ்வாறான சட்டவிரோதக் கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்க கடற்படையினர் தொடர்ச்சியான கண்காணிப்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




