ஜூட் சமந்த
சிலாபம் – மத்தி தொடுவாவ (Meda Thoduwawa) கடற்கரைப் பகுதி மீண்டும் ஒருமுறை கடுமையான கடல் அரிப்புக்கு உள்ளாகத் தொடங்கியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் பலமுறை இப்பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டபோது, ஊடகங்கள் வாயிலாக நிலைமை சுட்டிக்காட்டப்பட்டது. அதன் பின்னர் பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்க, கடலோரப் பாதுகாப்பிற்காகக் கல் அணைகள் (Rock revetments) அமைக்கப்பட்டன. இருப்பினும், தற்போது முன்னர் அமைக்கப்பட்ட அந்த கல் அணைகளுக்கு இடைப்பட்ட பகுதியிலேயே கடல் அரிப்பு மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மீனவர் நிரோஷன், கடந்த சில வாரங்களாக இந்த அரிப்பு அதிகரித்து வருவதாகவும், இரண்டு கல் அணைகளுக்கு இடைப்பட்ட சுமார் 200 மீற்றர் நீளமான கடற்கரைப் பகுதி, தற்போது சுமார் 25 மீற்றர் வரை கடலால் காவு கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தற்போது நிலவும் அமைதியான காலநிலையிலேயே இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டால், இன்னும் ஒரு மாதத்தில் ஆரம்பமாகவுள்ள கடல் சீற்றமான பருவ காலத்தில் நிலைமை இன்னும் மோசமடையும் என அவர் அச்சம் தெரிவித்தார்.
“சிறியதாக இருக்கும்போதே சரிசெய்யக்கூடிய ஒரு பிரச்சினையை, கோடரி கொண்டு வெட்டும் நிலைக்கு கொண்டு செல்ல வேண்டாம்” என அவர் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மற்றுமொரு குடியிருப்பாளரான ஜூட் ரஞ்சன் பெரேரா கூறுகையில், கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள இந்த 200 மீற்றர் எல்லைக்குள் 5 வீடுகளும் ஒரு இறால் இனப்பெருக்க பண்ணையும் அமைந்துள்ளன எனக் குறிப்பிட்டார். மேலும், கடற்கரைக்கு இணையாக அமைந்துள்ள ஒரு சிறிய வீதி எந்த நேரத்திலும் கடலுக்குள் அள்ளுண்டு போகும் அபாயம் உள்ளதாகவும், அவ்வாறு நடந்தால் வீடுகளுக்கும் பண்ணைக்கும் நேரடி அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதிகாரிகள் வந்து நிலைமையைப் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனரே தவிர, உருப்படியான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என அவர் சாடியுள்ளார். முன்னதாகப் பாதிப்புகளைத் தடுக்க கிராம மக்களால் போடப்பட்ட மணல் மூட்டைகளும் தற்போது கடலால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
கடற்கரை அரிப்பைத் தடுக்கத் தேவையான பெரிய கறுப்புக் கற்கள் கிராமத்திற்கு அருகிலேயே குவித்து வைக்கப்பட்டிருந்தும், அவற்றை அரிப்பு ஏற்படும் இடத்திற்குக் கொண்டு வருவதற்குத் தேவையான இயந்திரங்கள் தாராளமாக இல்லை என கடலோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் கூறுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விளக்கத்தைத் தங்களால் நம்ப முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்னும் ஒரு மாத காலத்தில் கடல் சீற்றமடையும் போது, இப்பகுதியில் தற்போதைய நிலையை விடப் பாரிய அழிவுகள் ஏற்படும் என்பது உறுதியானது. எனவே, அந்தப் பயங்கரமான பாதிப்புகள் ஏற்படும் வரை காத்திருக்காமல், உடனடியாகத் தீர்வுகளை வழங்குவதே முறையானது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




